Published : 18 Oct 2019 01:34 PM
Last Updated : 18 Oct 2019 01:34 PM

''எம்எல்ஏ, எம்.பி., கவுன்சிலர்கள் அனைவரும் ராஜினாமா செய்யுங்கள்''- பெங்களூரு வீதிகளை கலங்கடித்த மறியல்

பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் மிகவும் பரிதாபகரமாக இருக்கும் குப்பை அள்ளும் முறை, மோசமான சாலை வசதி, சுத்தமான குடிநீர் வழங்கப்படாமை போன்றவற்றில் தீர்வுகாண கோரி மகாதேவபுரா தொகுதி மக்கள் இன்று காலை போராட்டத்தில் இறங்கியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மராத்தஹள்ளியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு வர்தூர், பாலகேரே, குஞ்சூர், குஞ்சூர்பல்யா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களும் காலை 8.30 மணிக்கு வர்தூர் உயர்நிலைப்பள்ளிக்கு அருகில் மனித சங்கிலியை உருவாக்கினார்கள்.

அதன்பின்பு 9.30 மணிக்கு மராத்தஹள்ளி பாலம் பேருந்து நிறுத்தத்தில் நூற்றுக்கணக்கான மகாதேவபுரா குடியிருப்பு வாசிகள் குவிந்தனர். இதில் பல்வேறு தங்கள் பகுதிவாழ் அடிப்படை வசதிகள் கேட்டு அவர்கள் மிகவும் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தினர்.

இப்போராட்டத்தின்போது மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத மகாதேவபுரா உள்ளடக்கிய தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர், மகாதேவபுரா சட்டப் பேரவை உறுப்பினர், இப்பகுதியின் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர்.

மாநில தலைமைச் செயலாளர் டி.எம்.விஜய் பாஸ்கருக்கு அளித்துள்ள கடிதத்தில் சில முக்கிய கோரிக்கைகளில் கூறப்பட்டுள்ளதாவது:

மாநகராட்சி குப்பைகளை அகற்றுவதற்கு ஒரு சிறிய வாகனத்திற்கு மாதம் ரூ.56 ஆயிரம் செலுத்துகிறது. ஆனால் பகுதிவாரியான ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு வந்து தினம்தினம் குப்பை அகற்றப்படுவதில்லை.

சாலைகளில் நடைபாதைக்கான பகுதிகள் சரிவர ஒதுக்கப்படவில்லை. சுரங்க நடைபாதை வடிவமைப்புகள் குறைபாடுகளுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இப்பணி இன்னும் முழுமை பெறாததால் சாலையில் மக்கள் நடப்பதே பெரும் சவாலாக உள்ளது.

நல்ல குடிநீரை பெறுவதே தொலைதூர கனவாக மாறிவிட்டது. கழிவுநீர் அகற்றலிலும் சரியான கவனம் இல்லை. இருப்பினும் பெங்களூரு மாநகராட்சியான புருஹத் பெங்களூரு மகாநகர பாலிகேவுக்கு அதிக வரி செலுத்தும் தொகுதியாக மகாதேவபுரா உள்ளது.

இப்பகுதியில் வெகுஜன போக்குவரத்து மற்றும் சரியான பிஎம்டிசி பஸ் இணைப்பு இல்லாததால் குடியிருப்பாளர்கள் தங்கள் தனியார் வாகனங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், இப்பகுதி பிரதான சாலைகளில் போக்குவரத்து காவலர்களின் அக்கறையற்ற அணுகுமுறை மகாதேவபுர நகரில் மிகவும் மாசுபட்ட காற்றுக்கு வழிவகுக்கிறது.

குடிமக்கள் பிரச்சினைகளை அணுகுவதில் நூறு சதவீதம் வெளிப்படைத்தன்மை இருப்பினும், பெரிதாக எதுவும் மாறவில்லைஎன்று குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு ஒயில் பீல்ட் ரைசிங் தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளது.

இந்த அமைதிப் போராட்டத்திற்காக இந்த வாரம் முதலே சமூக வலைதளங்களில் ஒயிட்ஃபீல்ட் ரைசிங் என்ற சமூக நல அமைப்பு பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி #MahadevpuraDemands என்ற ஹேஸ்டேக் அமைத்து பிரச்சாரம் செய்து வந்தது.

மகாதேவபுரா தொகுதியில் இயங்கிவரும் குடிமக்கள் குழுக்களான ஒயிட்ஃபீல்ட் ரைசிங், பெல்லந்தூர் மன்றம், பெலத்தூர் ரைசிங், ஃபோர்ஸ்ஜிடபிள்யூ, நள்ளுரஹள்ளி ரைசிங், பெங்களூர் அடுக்குமாடி குடியிருப்புகள் கூட்டமைப்பு, கிரீன்வுட் ஹை இன்டர்நேஷனல், இன்வென்ச்சர் அகாடமி, டெல்லி பப்ளிக் ஸ்கூல் போன்ற பள்ளிகளும் இந்த போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை அளித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x