Published : 18 Oct 2019 01:37 PM
Last Updated : 18 Oct 2019 01:37 PM

வலுக்கும் எதிர்ப்பு: காங்கிரஸ் நிலைப்பாடு மாறுகிறதா; மன்மோகன் சிங் பேச்சு எதைக் காட்டுகிறது?

புதுடெல்லி

மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முக்கிய விஷயங்களான காஷ்மீருக்கான 370-வது பிரிவு நீக்கம், வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது ஆகியவற்றில் எதிர்ப்புக் குரலைக் குறைத்து மென்மையான போக்கைக் கையாண்டுள்ளார்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி எடுத்துள்ள நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்து வருவதால், தனது நிலைப்பாட்டிலிருந்து காங்கிரஸ் கட்சி இறங்கி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், 370-வது பிரிவு நீக்கத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாமல் தற்போதும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் விமர்சித்துப் பேசி வருகின்றனர்.

ஆனால், இதற்கு பாஜக சார்பில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு தேச விரோதமானது, பாகிஸ்தான் ஆதரவுக் குரலில் பேசுகிறார்கள் எனக் கூறி பதிலடி கொடுத்து வருகிறது.

காஷ்மீர் விஷயத்தில் ராகுல் காந்தி நிலைப்பாடு என்ன, காங்கிரஸ் நிலைப்பாடு என்ன என்று தெளிவுபடுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சரும், பாஜகவின் தேசியத் தலைவருமான அமித் ஷா காங்கிரஸ் கட்சிக்குக் கேள்வி எழுப்பியிருந்தார்.

மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தில், பேசிய பிரதமர் மோடி, ஹரியாணா, மகாராஷ்டிரா தேர்தல் அறிக்கையில் மீண்டும் காஷ்மீரில் 370-வது பிரிவு கொண்டு வருவோம் என்று கூறுவதற்கு காங்கிரஸ் கட்சிக்குத் துணிச்சல் இருக்கிறதா என்று சவால் விடுத்தார்.

காஷ்மீருக்கான 370-வது பிரிவு நீக்கம் என்பது தேச ஒருமைப்பாட்டோடு தொடர்புடையது. 70 ஆண்டுகளாக எந்த அரசும் செய்யாததை நாங்கள் செய்திருக்கிறோம் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்திப் பேசி வருகிறது.
இதனால் காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிருப்தி இருந்தபோதிலும் அதைத் தீவிரமாக வெளிக்காட்டாமல் அமைதி காத்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் மகாராஷ்டிரா, ஹரியாணா தேர்தலில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பெரும்பாலும் காஷ்மீர் விவகாரத்தைக் கையில் எடுத்துதான் பேசி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு காஷ்மீர் விவகாரத்துக்கு ஆதரவாக இருந்தால், வாக்குவீதத்தை கடுமையாகப் பாதிக்கும் என்பதால், மென்மையான போக்கை எடுத்துள்ளதா என்ற கேள்வியை எழுப்புகிறது. அதற்கு ஏற்றார்போல் மன்மோகன் சிங்கின் நேற்றைய பேச்சும் காங்கிரஸ் கட்சி தனது நிலையிலிருந்து விலகி ஆதரவுப் போக்கை எடுக்கிறதா என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்திய காங்கிரஸ் கட்சி அதிலும் மென்மையான குரலைப் பயன்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், "வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை. ஆனால் அவரின் தீவிரமான இந்துத்துவா சித்தாந்தங்களை மட்டும்தான் எதிர்க்கிறோம். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வீர சாவர்க்கருக்கு அஞ்சல் தலை கூட வெளியிட்டுள்ளார்" என்று மென்மையான போக்கில் பேசினார்.

காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கம் குறித்துப் பேசிய மன்மோகன் சிங், " காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கத்தை காங்கிரஸ் எதிர்க்கவில்லை. அது தற்காலிகமான பிரிவுதான். ஆனால், அதைக் கொண்டுவந்த விதத்தைத்தான் எதிர்த்தோம். காஷ்மீர் மக்களின் ஒப்புதலுடன் கொண்டுவந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தோம்" என்றார்.

காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கம், வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது ஆகிய இரு விஷயங்களைக் கையில் எடுத்து அரசியல் செய்துவந்த காங்கிரஸ் கட்சிக்கு கடும் எதிர்ப்புகள் பாஜக தரப்பிலிருந்து வந்ததால் வேறு வழியின்றி மென்மையான போக்கையும், தனது நிலைப்பாட்டில் இருந்தும் மாறுகிறதா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

மேலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒருபுறம் காஷ்மீர் விவகாரத்துக்கு எதிராகப் பேசி வருகிறார்கள். மறுபுறம் மன்மோகன் சிங் போன்றோர் மென்மையான போக்கைக் கையில் எடுக்கிறார்கள் என்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x