

புதுடெல்லி
சட்டவிரோதமாக மெக்சிகோவில் தங்கியிருந்ததாக கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 311 இந்தியர்களும் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தனர்.
நாடு சுதந்திரமடைவதற்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலும் ஏராளமான சீக்கியர்கள் இங்கிலாந்துக்கும், அமெரிக்காவுக்கும் சென்று அங்கேயே தங்கி விட்டனர். அங்கு வெற்றிகரமாக வரத்தகம் செய்யும் இவர்கள் பெரும் பணக்காரர்களாகவும் உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாகவே பஞ்சாபில் இருந்து ஏராளமானோர் அமெரிக்காவிற்கு செல்கின்றனர். படித்தவர்கள், மென்பொருள் பொறியாளர்கள் போன்றவர்களுக்கு அமெரிக்கா செல்ல எளிதில் விசா கிடைத்து விடுகிறது.
ஆனால் ஹோட்டல் போன்ற வணிகம் செய்யும் நோக்கத்துடன் அங்கு செல்ல விரும்பும் பஞ்சாபியர்களுக்கு விசா எளிதில் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் சட்டவிரோதமான முறையில் அங்கு செல்ல முற்படுகின்றனர்.
அமெரிக்க கனவு
பல நாடுகளுக்கு மாறி மாறி சென்று, அமெரிக்க விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு உள்ளே நுழைவது எளிதான காரியம் அல்ல. இவ்வாறு சட்டவிரோதமாக செல்பவர்களை அழைத்து செல்ல பஞ்சாபில் பெரிய குழுக்கள் செயல்படுகின்றன. இவர்கள் மூலம் அமெரிக்காவிற்குள் நுழைய பல லட்சம் செலவு செய்கின்றனர்
அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் கையில் சிக்கி சிறை சென்ற பஞ்சாபியர்களை மீட்க அமெரிக்காவில் பெரிய குழுவே செயல்படுகிறது. இவர்களுக்கு பணம் கொடுத்து அவர்கள் வழக்கு நடத்தி அவர்கள் வெளியே வந்து விடுகின்றனர்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கடுமையாக தண்டித்து வருகிறார். குறிப்பாக மெக்ஸிகோ வழியாக தஞ்சம் புகும் அகதிகளை தடுத்து நிறுத்தி கைது செய்வதுடன் அவர்களின் குழந்தைகளையும் பிரித்த கொடுமை படுத்த உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டில் உரிய அனுமதி இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 2382 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டில் உள்ள 86 சிறைகளில் அடைக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
மேலும் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பவும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து நிறுத்தாத மெக்சிகோ மீது நடவடிக்கை எடுக்கவும் ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அமெரிக்க அரசின் கடும் நெருக்கடி காரணமாக மெக்சிகோ குடியேற்றத்துறை கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது.
311 இந்தியர்கள்
இந்தநிலையில் மெக்ஸிகோவில் சட்டவிரோதமாக குடியேறியதாக ஒரு பெண் உட்பட 311 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மெக்சிகோவில் இருந்து அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. 311 இந்தியர்களை, சிறப்பு விமானம் மூலம் மெக்சிகோ அரசு இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. இதுபோன்று இந்தியாவுக்கு அவர்கள் திருப்பி அனுப்பப்படுவது இது முதல்முறையாகும்.
மெக்சிகோவில் இருந்து ஸ்பெயினின் மாட்ரிட் வழியாக வந்த இந்த ஏர்பஸ் விமானம், இன்று காலை 5 மணியளவில் டெல்லி விமான நிலையம் வந்து சேர்ந்தது. அவர்களிடம் டெல்லி விமான நிலையத்தில் குடியேற்றத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.