அயோத்தி விவகாரத்தில் சமரசம் எட்டப்பட்டதா? - மத்தியஸ்தக் குழு அறிக்கை தாக்கல்

அயோத்தி விவகாரத்தில் சமரசம் எட்டப்பட்டதா? - மத்தியஸ்தக் குழு அறிக்கை தாக்கல்
Updated on
1 min read

புதுடெல்லி

அயோத்தி விவகாரத்தில் சில இந்து, முஸ்லிம் அமைப்புகள் இடையே சமரசம் எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அயோத்தி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்படுத்து வதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில் மத்தியஸ்தக் குழு அமைக்கப்பட்டது.

இதில், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டப்படாததால், கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதலாக இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. அதேசமயத்தில், மத்தியஸ்தக் குழுவும் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதனிடையே, நேற்று முன்தினம் அனைத்து வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மத்தியஸ்தக் குழுவும் அன்றைய தினம் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை
மத்திய அரசே கையகப்படுத்திக் கொள்ள சில முஸ்லிம் அமைப்புகள் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக, அயோத்தியில் உள்ள அனைத்து மசூதிகளையும் புனரமைத்து தர வேண்டும் என்றும், அயோத்தில் மசூதி கட்டுவதற்கு ஏதேனும் ஓர் இடத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிகிறது.

முஸ்லிம் அமைப்புகளின் இந்த வாதத்தை ராமஜென்ம பூமி பன்ருதர் சமிதி, நிர்மோஹி அகாடா, நிர்வானி அகாடா ஆகிய இந்து அமைப்புகளும் ஏற்றுக் கொண்டிருப்பதாக மத்தியஸ்தக் குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மத்தியஸ்தக் குழுவின் இந்த அறிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் நேற்று கூடி விவாதம் நடத்தினர்.

ஊடகங்களுக்கு கட்டுப்பாடு செய்தி ஒளிபரப்பு தர ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “அயோத்தி நில பிரச்சினை விவகாரத்தில் வழக்கு குறித்து தொலைக்காட்சிகள் எச்சரிக்கையுடன் செய்திகளை வெளியிட வேண்டும். பதற்றத்தை ஏற்படுத்தக் கூடிய விவாதங்களை தவிர்க்க வேண்டும். நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி இருக்கும், அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்றோ, எந்த ஒரு தரப்புக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ கருத்து ஏற்படும் வகையில் செய்திகள், நிகழ்சிகளை ஒளிபரப்பக் கூடாது” என கூறப்பட்டுள்ளது.

- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in