Last Updated : 18 Oct, 2019 10:27 AM

 

Published : 18 Oct 2019 10:27 AM
Last Updated : 18 Oct 2019 10:27 AM

கோவை கொள்ளையர், மீட்கப்பட்ட நகைகளை கொண்டுசெல்ல உ.பி. வந்த தமிழக காவல்துறை

புதுடெல்லி

தமிழகக் காவல்துறையினர் நேற்று உபியின் பரேலிக்கு வந்து சேர்ந்தது. இவர்கள், கோயம்புத்தூரில் கொள்ளை போன நகைகளுடன் அதன் கொள்ளையர்களுடன் ஓரிரு தினங்களில் திரும்ப உள்ளனர்.

பெங்களூருவில் இருந்து கோவை திரும்பிக் கொண்டிருந்த ஆம்னி பேருந்தில் கடந்த மாதம் 25 விடியலில் 1.3 கிலோ தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இவை, கோவை அசோக்நகரில் உள்ள தர்மா ஜுவல்லர்ஸ் உரிமையாளரான பி.முரளி நரசிம்மனுக்கு சொந்தமானவை.

இதன் மீதான வழக்கு கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலையீட்டின் பேரில் பதிவானது. தன் நகைகளை மீட்கும் முயற்சியில் தானே இறங்கிய முரளிக்கு கொள்ளையர்கள் உபியை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது.

இதனால், உபியின் முராதாபாத்தில் உள்ள அம்மாநில சிறப்பு படை பிஏசியின் கமாண்டரும், தமிழருமான ஜி,முனிராஜ்,ஐபிஎஸ் அதிகாரியிடம் உதவி கோரியுள்ளார் முரளி. முனிராஜ் உதவியுடன் பிஜ்னோரின் எக்ஸான்(47), தேவேந்தர்(25) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இருவரும், தாம் கொள்ளையடித்த நகைகளை விற்க முற்பட்ட போது கடந்த 11 ஆம் தேதி பரேலி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் முழுநகைகளும் மீட்கப்பட்டு, தற்போது நீதிமன்றக்காவலில் பரேலி சிறையில் இருப்பவர்களை அழைத்துச் செல்ல கோவை காவல்படை வந்துள்ளது.

(ரோஸ் நிற சட்டை அணிந்தவர் தேவேந்தர்(25) ,வெள்ளை சட்டை அணிந்த வயதானவர் எக்ஸான்(47)

கோவை ரத்தினபுரி காவல் நிலையப் பகுதி (பொறுப்பு) உதவி ஆணையர் ராஜ்குமார் நவ்நீத் தலைமையில் ஐந்து பேர் வந்துள்ளனர். ரத்தினபுரி காவல் நிலையக் குற்றவியல் பிரிவு ஆய்வாளர் டி.வீரம்மாள், துணை ஆய்வாளர் ராஜேந்திரன், தலைமைக் காவலர் ஸ்ரீதரன் ஆகியோருடன் மேலும் இருகாவலர்களும் அதில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ரயிலில் நேற்று முன் தினம் டெல்லி வந்துசேர்ந்து விட்டனர். அன்றைய தினம், வீரம்மாள் மட்டும் கோவை நீதிமன்றத்தில் கொள்ளையர்களுக்கான ’டிரான்ஸின் வாரண்ட்’ பெற்று விமானத்தில் வந்துள்ளார்.

அனைவரும் டெல்லியில் இருந்து சாலைவழியாக பரேலி வந்து நேற்று மாலை அதன் நகர ஆய்வாளர் ஜித்தேஷ் கபிலை சந்தித்துள்ளனர். இவர், கோவையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பரேலியில் விற்க முயன்றபோது இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தவர்.

கபிலுக்கு தான் கைதுசெய்த குற்றவாளிகளின் மீதான முக்கிய வழக்கின் விசாரணைக்கு கோவை அனுப்ப ஆட்சேபனை எதுவும் இல்லை. எனவே, இதற்காக இன்று பரேலி குற்றவியல் நீதிமன்றத்தில் கோவை போலீஸார் மனுச் செய்ய உள்ளனர்.

இதில் கொள்ளையர்களுடன், நகைகளையும் கொண்டுசெல்ல இன்று அல்லது நாளை அனுமதி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. பிறகு கொள்ளையர் மற்றும் நகைகளுடன் உடனடியாக அனைவரும் கோவை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொள்ளையர்களிடம் மீட்கப்பட்ட நகைகள் கோவை கொள்ளை வழக்கை சேர்ந்தது என்பதால் அவை அனைத்தும் இங்கு வந்துள்ள தமிழகக் காவல்படையினரிடம் பரேலி நீதிமன்றம் ஒப்படைக்க உள்ளது.

இதுபோல், கோவையில் கொள்ளையடித்து விட்டு உபியில் கைதாகும் கொள்ளையர்களிடம் ரூ.44 லட்சம் மதிப்புள்ள முழுநகைகள் மீட்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x