

நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தை, காங்கிரஸ் கட்சி ஆளும் முதல்வர்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட 13 முதல்வர்கள் புறக்கணித்தனர்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் சில திருத்தங்களை பாஜக அரசு மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பான மசோதாவுக்கு விவசாயிகளும், பல மாநிலங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், நிலம் கையகப்படுத்தும் மசோதா உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் `நிதி ஆயோக்’ அமைப்பின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க எல்லா மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், காங்கிரஸ் கட்சி ஆளும் 9 மாநில முதல்வர்கள் (கேரளா, கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், அசாம், மணிப்பூர், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம்) மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தனர்.
எனினும், நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்ட பிறகு 2-வது முறையாக நேற்று நடந்த கூட்டத்தில், பாஜகவை கடுமையாக எதிர்த்து வரும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மற்றும் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் மசோதா, வறுமை ஒழிப்பு, சுகாதாரம் போன்ற விஷயங்களில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
“இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்பதால் எந்த பலனும் கிடையாது. விவசாயிகள், பழங் குடியினத்தவர்களின் உரிமை களை நசுக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்திருத்தம் கொண்டு வர பாஜக முயற்சிக் கிறது” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.என்.சிங் தெரிவித்தார்.