Published : 18 Oct 2019 08:57 AM
Last Updated : 18 Oct 2019 08:57 AM

பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திரலேகா சந்தித்தது உண்மைதான்: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலம்

இரா.வினோத்

பெங்களூரு

பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலாவை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா சந்தித்தது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட அமமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா சசிகலாவை சந்தித்ததாக தகவல் வெளியானது. இதனை இரு தரப்பினரும் மறுத்து வந்தனர்.

இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்ம மூர்த்தி கடந்த மே மாதத் தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை சிறையில் சசிகலாவை எத்தனை பார்வையாளர்கள் சந்தித்து பேசினர், எத்தனை மணி நேரம் சந்திப்பு நிகழ்ந்தது என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு கர்நாடக சிறைத்துறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

அதில், “கடந்த மே முதல் ஆகஸ்ட் வரை சசிகலாவை 36 பார்வையாளர்கள் சந்தித்து பேசி யுள்ளனர். அதில் அதிகபட்சமாக சசிகலாவின் உறவினரும், அமமுக துணைப் பொதுச்செயலாளரு மான டிடிவி தினகரன் 7 முறை சந்தித்துள்ளார். அவருக்கு அடுத்த நிலையில் சசிகலாவின் உறவினர் கள் ராமசந்திரன் 6 முறையும், கமலா 5 முறையும், சிவகுமார் 4 முறையும் சந்தித்து பேசியுள்ளனர்.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா ஆகஸ்ட் 20-ம் தேதி சசிகலாவை ''நண்பர்'' என்ற உறவு முறையில் சந்தித்துள்ளார். பகல் 1 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு 1.45 வரை நீடித்துள்ளது '' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரலேகா

என்ன பேசினார்கள்?

இதுகுறித்து நரசிம்ம மூர்த்தி கூறுகையில், '' சிறையில் சசிகலா விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதை முன்னாள் டிஐஜி ரூபா அம்பலப்படுத்தியுள்ளார். அதனை விசாரித்த ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமாரும் உறுதி செய்து அறிக்கை அளித்திருக் கிறார். கர்நாடக அரசு அந்த அறிக் கையின் மீது எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இதனிடையே நன்னடத்தை விதிகளின் கீழ் தன்னை விடுதலை செய்யுமாறு சசிகலா மனு அளித்திருக்கிறார்.

பாஜகவுக்கு ஆதரவு

சசிகலாவுடனான சந்திரலேகாவின் சந்திப்பு குறித்து சிறை வட்டாரத்தில் விசாரித்த போது சசிகலாவின் விடுதலை குறித்தும், பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்தும் பேசியதாக கூறினார்கள். அதாவது சிறையில் இருந்து விரைவில் விடுதலையானதும், அமமுகவை அதிமுகவில் இணைக்க வேண்டும் எனவும், வலுவான கட்சியாக மாறிய பிறகு பாஜகவை ஆதரிக்க வேண்டும் எனவும் சசிகலாவிடம் சந்திரலேகா கூறியுள்ளார். அதற்கு சசிகலா ஒப்புக்கொண்டால் அவரது விடுதலைக்கு உதவுவதாக வாக் குறுதி அளிக்கப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலாவை நன்னடத்தை விதி களின்படி முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது. இதனை சுட்டிக்காட்டி கர்நாடக அரசுக் கும், ஆளுநருக்கும், சிறை அதி காரிகளுக்கும் நான் கடிதம் எழுதப் போகிறேன்''என்றார்.

நரசிம்மமூர்த்தி

அதிமுகவில் இணைய பேச்சுவார்த்தை

பெங்களூருவில் உள்ள ஒரு அமமுக நிர்வாகி கூறும்போது, “சசிகலா எதிர்பார்த்த அளவுக்கு டிடிவி தினகரன் அக்கட்சியை வளர்க்கவில்லை. அதனால் அவர் மீது சசிகலா நம்பிக்கை இழந்துவிட்டார். அடுத்து என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கும்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி சில அதிமுக மூத்த தலைவர்கள் சசிகலாவை சந்தித்து பேசினர். அப்போது பலமான திமுகவை எதிர்க்க வேண்டுமானால் அதிமுகவை பலப்படுத்த வேண்டியுள்ளது. எனவே கடந்த காலத்தை மறந்து அதிமுகவில் இணையும்படி கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு சசிகலா உடனடியாக பதில் அளிக்காததால் பாஜக மூலம் மீண்டும் அவரிடம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.அதன் காரணமாகவே சந்திரலேகாவை சந்திக்க வைத்துள்ளனர். சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னால் சந்திரலேகா ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய போது சசிகலாவின் கணவர் அவரிடம் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றினார். அப்போது சந்திரலேகாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே நல்ல பழக்கம் இருந்தது. அவர்தான் சசிகலாவை ஜெயலலிதாவுக்கு அறிமுகப்படுத்தினார். எனவே சசிகலாவுக்கு சந்திரலேகா மீது தனித்த அன்பும், மரியாதையும் இருக்கிறது. அவர் சொன்னால் சசிகலா கேட்பார் என்பதால் இந்த சந்திப்பு நிகழ்ந்தது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x