

மும்பை, பிடிஐ
மகாராஷ்டிரா அரசையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்த மன்மோகன் சிங் ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஆகியோர் காங்கிரசுக்கு நாட்டுப்பற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டிய அவசியமில்லை என்று சாடியுள்ளார்.
மகாராஷ்டிராவிலும் சரி மத்தியிலும் சரி மக்களுக்கு நலன் பயக்கும் கொள்கைகளை எடுப்பதில்லை என்று சாடினார் மன்மோகன் சிங்.
மும்பையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்துப் பேசிய மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சிக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவிடமிருந்து நாட்டுப்பற்று சான்றிதழ் தேவையில்லை என்றார்.
மேலும் மகாராஷ்டிரா மாநிலம் அதிக முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக இருந்தது என்று விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துள்ள மாநிலமாக உள்ளது என்றார்.
“பணவீக்க விகிதம் குறைவாக இருக்க வேண்டும் என்ற பிடிவாதத்தினால் விவசாயிகளின் துன்பம் அதிகரித்துள்ளது. மத்திய அரசின் ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கைகள் விவசாயிகளின் வாழ்க்கையை மோசமாக்கி விட்டது. தொழிற்துறை மந்த நிலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிராவும் மும்பையும் உள்ளது.
நிர்மலா சீதாராமன் கூறியது பற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை. ஆனால் பொருளாதாரத்தைச் சரி செய்வதற்கு அது எதனால் இப்படி நசிந்துள்ளது என்பதை முதலில் கண்டறிய வேண்டும். ஆனால் இன்றைய அரசு எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதில்தான் அதிக கவனம் செலுத்துகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில்தான் அதிக தொழிற்சாலைகள் மூடப்பட்டன. வர்த்தகச் சூழல் மோசமடைந்து நிறைய தொழில்கள் மூடும் நிலையில் உள்ளன.
என்னுடைய ஆட்சிக்காலத்தில் சில பலவீனங்கள் இருந்திருக்கலாம். ஆனால் இந்த அரசு பதவிக்கு வந்து தற்போது ஐந்தரை ஆண்டுகள் ஆகிறது, இந்தக்காலக்கட்டங்களில் நம்மைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்கலாமே. அனைத்தையும் ஐமுகூ ஆட்சிக்காலத்திற்குக் குற்றம் சுமத்த முடியாது.
நம் நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் அசவுகரியங்களுக்கு பாஜக அரசின் பங்களிப்பு பெரிய அளவினதாகும்.” என்ற மன்மோகன் சிங். பணமதிப்பு நீக்கம் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றியும் குறிப்பிடும் போது, நகர்ப்புற இளைஞர்களில் மூவரில் ஒருவர் வேலையற்றவராக இருக்கிறார் என்றார்.