Published : 17 Oct 2019 04:36 PM
Last Updated : 17 Oct 2019 04:36 PM

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் ராம ஜென்மபூமி தான்; ஆதாரம் தேவையில்லை: கர்நாடக அமைச்சர் திட்டவட்டம்

பெங்களூரு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் ராம ஜென்மபூமி தான் என்பதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை என பாஜகவைச் சேர்ந்த கர்நாடக மாநில அமைச்சர் சி.டி.ரவி கூறியுள்ளார்.

அயோத்தி ராம ஜென்ம பூமி பாபர் மசூதி நிலத் தகராறு வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா விரஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்காக மத்தியஸ்த குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் நியமித்தது. ஆனால் சமரச முயற்சி தோல்வி அடைந்ததால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடர்ந்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் அக்டோபர் 18-ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் திட்டமிட்டிருந்த நிலையில் 2 நாள் முன்கூட்டியே நேற்று விசாரணை நிறைவு செய்யப்பட்டது.

இதுபற்றி பெங்களூருவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில சுற்றுலா துறை அமைச்சர் சி.டி.ரவி கூறியதாவது:

‘‘அயோத்தி ராம ஜென்மபூமி வழக்கில் தீர்ப்பை எதிர்பார்த்து நாடே காத்திருக்கிறது. நானும் காத்து இருக்கிறேன். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருப்பது ராம ஜென்மபூமி தான். இதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை. பல ஆயிரம் ஆண்டுகளாகவே இதே நம்பிக்கையில் தான் நாம் வாழ்கிறோம்’’ எனக் கூறினார்.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x