Published : 17 Oct 2019 03:50 PM
Last Updated : 17 Oct 2019 03:50 PM

இந்திய வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும்: அமித் ஷா விருப்பம்

வாரணாசி

இந்தியாவின் பார்வையில் வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் கருத்தரங்கில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

வீர சாவர்க்கர் மட்டும் இல்லையென்றால் 1857-ம் ஆண்டு நடந்த முதல் இந்திய சுதந்திர போர் வரலாற்றில் ஆங்கிலேயர்களின் பார்வையில் தான் பதிவாகி இருக்கும். அவ்வாறு தான் நமக்கும் தெரிந்து இருக்கும்.

முதல் இந்திய சுதந்திர போர் என்ற வார்த்தையை கூறியவர் சாவர்க்கர் தான். இல்லையென்றால் நமது குழந்தைகள் பிரிட்டிஷாருக்கு எதிரான கலகம் என்றே எண்ணியிருப்பார்கள்.

யாரையும் புண்படுத்தாமல் இந்திய வரலாற்றை இந்தியாவின் பார்வையில் மீண்டும் எழுத வேண்டும். இங்குள்ள வரலாற்று அறிஞர்களிடம் இதனை கேட்டுக் கொள்கிறேன். நமது வரலாற்றை எழுதுவது நமது கடமை.

எத்தனை காலத்துக்கு தான் நாம் ஆங்கிலேயர்களை குறை சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம். யாருடனும் நமக்கு எந்தவித மோதலும் இல்லை. எனவே உண்மை எதுவோ அதனை எழுத வேண்டிய தருணம் இது. விக்கிரமாதித்யா போன்ற மாமன்னர்களை பற்றி இந்த தலைமுறைக்கு எதுவும் தெரியவில்லை. ஏனெனில் எந்த ஆவணமும் நம்மிடம் இல்லை.

பிரதமர் மோடியின் முயற்சியால் உலக அரங்கில் இந்தியாவின் பெருமை உயர்ந்து வருகிறது. உலகளாவிய விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசுவதை உலகமே உற்று நோக்கி கேட்கிறது.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x