Published : 17 Oct 2019 03:23 PM
Last Updated : 17 Oct 2019 03:23 PM

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370 பிரிவு நீக்கத்தை கேலி செய்தவர்களை வரலாறு கவனிக்கும்: பிரதமர் மோடி சாடல்

பீட்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370 பிரிவு நீக்கத்தை கிண்டல் செய்தவர்களை வரலாறு கவனிக்கும். அவர்களை தண்டிக்க மகாராஷ்டிரா மக்களுக்கு வாய்ப்புகிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை மறைமுகமாகச் சாடினார்

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 21-ம் தேதி 288 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தலும், 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி நகரில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

மகாராஷ்டிராவில் நடக்கும் தேர்தல் என்பது, பாஜகவின் வளர்ச்சியின் சக்திக்கும், எதிர்க்கட்சிகளின் சுயநலத்துக்கும் இடையே நடக்கும் போர்.

நான் உங்களையும், உங்கள் தேசபக்தியையும் நம்புகிறேன், இந்த நாட்டின் நலனுக்கு விரோதமாக இருப்பவர்களுக்கு மிகப்பெரிய பாடத்தை உங்களின் தேசபக்தி புகட்டும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370 பிரிவை நீக்கியதை கிண்டல் செய்தவர்களை வரலாறு கவனிக்கும்.

சில காங்கிரஸ் தலைவர்கள் சொல்கிறார்கள், காஷ்மீரில் இந்து மக்கள் அதிகமாக இருந்தால், 370 பிரிவை நீக்கி முடிவு எடுத்து இருப்பார்களா என்று பேசினார்கள். நான் சொல்கிறேன் தேசஒருமைப்பாடு எனும்போது இந்து, முஸ்லிம் என சிந்திப்பீர்களா. அது உங்களுக்கு சரியாகுமா.

370 பிரிவை நீக்கியது கொலைக்குச் சமமானது. இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினை உள்நாட்டுவிவகாரம் அல்ல, 370 பிரிவுநீக்கம் நாட்டுக்கு பேரழிவு, காஷ்மீரை இழந்துவிடுவோம் என்றெல்லாம் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் பேசினார்கள்.
காங்கிரஸ் கட்சியை தண்டிக்க தேசம் வாய்ப்பை எதிர்நோக்கி இருக்கிறது. அந்த வாய்ப்பு மகாராஷ்டிரா மாநிலத்தின் கதவுகளை தட்டி இருக்கிறது.

மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கி இருக்கிறது. குறித்துக்கொள்ளுங்கள் தாமரைச் சின்னம் பீட் மாவட்டத்தில் எப்போதும் மலர்ந்திருக்கும். அடுத்தவாரம் வரும் தேர்தல் முடிவுகள் அனைத்து வரலாற்று சாதனைகளையும முறியடிக்கும்.

பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் வரும் கூட்டத்தைப் பார்த்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பெருமூச்சுவிடுகிறார்கள். பீட் மாவட்டம் கோபிநாத் முன்டே, பிரமோத் மகாஜன் ஆகிய இரு தலைவர்களை அளித்துள்ளது.
முதல்வர் பட்னாவிஸும், பங்கஜா முன்டேவும் மாநில மக்களின்கனவுகளை நிறைவேற்ற உழைக்கிறார்கள். பாஜகவினர் கடின உழைப்பால் மக்களின் மனதை வென்றுவிட்டார்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x