Published : 17 Oct 2019 02:26 PM
Last Updated : 17 Oct 2019 02:26 PM

62 ஆண்டுகால ஜம்மு காஷ்மீர் சட்ட மேலவை கலைப்பு; ஊழியர்கள் நேரில் ஆஜராக நிர்வாகம் உத்தரவு

கோப்புப்படம்

ஜம்மு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 62 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சட்ட மேலவையைக் கலைத்து மாநில நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதில் உள்ள 116 உறுப்பினர்கள், ஊழியர்கள் வரும் 22-ம் தேதிக்குள் பொது நிர்வாகத்துறையிடம் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் நேற்று நள்ளிரவு பிறப்பித்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்த மத்திய அரசு 370-வது பிரிவையும் திரும்பப் பெற்றது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக்கை மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் வரும் யூனியன் பிரதேசமாகவும் மாற்றி உத்தரவிட்டது.

யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் உத்தரவு வரும் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் தற்போது சட்டப்பேரவையும், சட்டமேலவையும் செயல்பட்டு வருகிறது. ஆனால், வரும் 31-ம் தேதியில் இருந்து ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டால், அங்கு சட்ட மேலவை தேவையில்லை. சட்ட மேலவை செயல்படாது.

யூனியன் பிரதேசமாக மாறும் அறிவிப்பு இன்னும் இரு வாரங்களில் செயல்பாட்டுக்கு வர இருக்கும் நிலையில், சட்ட மேலவையைக் கலைத்து நேற்று நள்ளிரவு ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டது.

இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் செயலாளர் பரூக் அகமது லோன், பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், " ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019, பிரிவு 57-ன் படி, ஜம்மு காஷ்மீர் மேலவை கலைக்கப்படுகிறது.

வரும் 22-ம் தேதிக்குள் மேலவையில் உள்ள 116 ஊழியர்கள் பொது நிர்வாகத்துறையிடம் நேரில் ஆஜராகி தங்கள் வருகையைப் பதிவு செய்ய வேண்டும். அரசு நிர்வாகத்துக்காக வாங்கப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் மாநில மோட்டார் பாதுகாப்பு இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும், கட்டிடங்கள், பர்னிச்சர்கள், மின்னணு சாதனங்கள் போன்றவற்றை எஸ்டேட் இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும்.

சட்டப்பேரவை தொடர்பான அனைத்து ஆவணங்களும் சட்டம், நீதித்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை செயலாளருக்கு மாற்றப்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

36 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டமேலவை 1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சட்டப்பேரவையில் 87 உறுப்பினர்களும், 2 நியமன உறுப்பினர்களும் உள்ளனர்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x