

ஹைதராபாத்
26 கோரிக்கைகளை வலியுறுத்தி தெலங்கானா மாநிலத்தில் போராடி வரும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இன்று 13-வது நாளாகத் தொடர்கிறது.
போக்குவரத்துத் தொழிலாளர்களும், அரசும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று ஹைதராபாத் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியும் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தாததால், வேலைநிறுத்தம் நீடித்து வருகிறது.
தெலங்கானாவில் உள்ள அரசுப் பேருந்துக் கழக ஊழியர்கள் தங்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும், பேருந்துக் கழகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட 26 கோரிக்கைகளை வலியுறுத்தி தசரா பண்டிகைக்கு முன்பாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலைநிறுத்தத்தில் ஏறக்குறைய 48 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்றனர். தங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்ற போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் நிராகரித்தார்.
தொழிலாளர்கள் அனைவரும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும், அவர்களின் கோரிக்கையைப் பரிசீலிப்பதற்குத் தனியாக குழு அமைக்கப்படும் என்றும் முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார். ஆனால், தங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதை முதல்வர் சந்திரசேகர் ராவ் ஏற்கவில்லை.
இதனையடுத்து, கடந்த சனிக்கிழமைக்குள் ஊழியர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால், 48 ஆயிரம் ஊழியர்கள் தாங்களாகவே தங்கள் பணியில்இருந்து விலகிக்கொண்டதாக கருதப்பட்டு, நீக்கப்படுவார்கள் என்று முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார். ஆனால், போக்குவரத்து ஊழியர்கள் யாரும் பணிக்குத் திரும்பாததால், 48 ஆயிரம் ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெலங்கானா அரசு அறிவித்தது.
மேலும், பொதுமக்களுக்கு போக்குவரத்தில் இடையூறு ஏற்படாமல் இருக்க தற்காலிக ஊழியர்களைக் கொண்டும், தனியார் பேருந்துகளையும் கொண்டு போக்குவரத்தை இயக்க முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டார்.
இதன்படி 5,200 பேருந்துகளை இயக்க முன்னுரிமை அடிப்படையில் ஓட்டுநர்களும், 3,100 பேர் தற்காலிக ஓட்டுநர்களாகவும் நியமிக்கப்பட்டு தெலங்கானா அரசு பேருந்துகளை இயக்கி வருகிறது.
இதற்கிடையே போக்குவரத்து ஊழியர்களும், மாநில அரசும் பேச்சுவார்த்தை மூலம் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியும் இன்று 13-வது நாளாகப் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
போக்குவரத்துப் பணிமனையில் இருந்து பேருந்துகளை வெளியே வரவிடாமல், வாயிலில் அமர்ந்து போக்குவரத்து ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்தினர். இதையடுத்து, போராட்டம் நடத்திய ஊழியர்களை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
போக்குவரத்தில் எந்தவிதமான சிக்கலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக பணிமனைகளிலும், பேருந்து நிலையங்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சீரான முறையில் மாநில அரசு பேருந்துகளை இயக்கி வருகிறது.
இதுகுறித்து தெலங்கானா அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், " தற்போது வரை 75 சதவீதப் பேருந்துகளை தொடர்ந்து இயக்கி வருகிறோம். விரைவில் மீதமுள்ள 25 சதவீதப் பேருந்துகளையும் இயக்குவோம். மக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இன்று பேருந்துகளை இயக்குவோம்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே போக்குவரத்து ஊழியர்களுடன் எந்தவிதமான பேச்சுக்கும் வாய்ப்பில்லை. சமாதானத்துக்கும் செல்ல முடியாது என்று முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வேலைக்குத் திரும்பாத ஊழியர்கள் தாங்களாகவே வேலையிழந்தார்கள். அவர்களை மீண்டும் பணிக்கு அமர்த்திக் கொள்ளலாம் எனும் திட்டத்தையும் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் நிராகரித்துவிட்டார்.
தெலங்கானாவில் பண்டிகை நேரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், ரூ.150 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள முதல்வர் சந்திரசேகர் ராவ், ''இழப்பில் செயல்படும் போக்குவரத்துக் கழகத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.3,300 கோடி வழங்கினேன். இழப்புக்கு முக்கியக் காரணமாக, ஊழியர்கள் ஊதியம் மட்டும் 67 சதவீதம் உயர்ந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே வேலைநிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக ஓஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்களும் இன்று முதல் இணைந்துள்ளார்கள். மாணவர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளதால், பல்கலைக்கழகத்தைச் சுற்றி போலீஸார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஐஏஎன்எஸ்