

என்.மகேஷ்குமார்
ஹைதராபாத்
தெலங்கானாவில் அரசு போக்குவரத்துக் கழகத்தை அரசுத் துறையாக அறிவிக்க வேண்டும், தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த 5-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அரசின் காலக் கெடுவுக்குள் பணிக்குத் திரும் பாத 48,500 ஊழியர்கள் தாங்களா கவே பதவி விலகியதாக அரசு எடுத்துக்கொள்ளும் என முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்தார்.
எனினும் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என போராட்டத்தை போக்குவரத்து ஊழியர்கள் தொடர்கின்றனர். இதனிடையே அரசின் பிடிவா தத்தை கண்டித்து இதுவரை 2 ஊழியர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதனால் போராட்டம் தீவிரமடைந்தது.
இந்நிலையில், 3,500 பஸ்களை தனியார் இயக்க தெலங்கானா அரசு நேற்று முடிவெடுத்தது. இதன் காரணமாக வரும் 19-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு போக்குவரத்து ஊழியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதற்கு தெலுங்கு தேசம், காங்கிரஸ், பாஜக, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.