Published : 24 Jul 2015 09:07 AM
Last Updated : 24 Jul 2015 09:07 AM

கர்நாடக முதல்வரை விமர்சித்த காங்கிரஸ் எம்எல்ஏ நீக்கம்

கர்நாடகா மாநில முதல்வர் சித்தரா மையாவை விமர்சித்ததால், அம்மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாட்டீல் நாடஹள்ளி, கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் பீஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள‌ தேவரஹிப்பரகி தொகுதி எம்எல்ஏ பாட்டீல் நாடஹள்ளி. இவர் வட கர்நாடகத்தை சித்தராமையா புறக்கணித்து வருவதாக குற்றம்சாட்டி வந்தார். வட கர்நாடகா தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால் தனி மாநிலமாக்க வேண்டும் எனவும் போர்க்கொடி தூக்கினார்.

கர்நாடகா காங்கிரஸில் கோஷ்டி பூசல் அதிகரிப்பதற்கும், மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு முதல்வர் சித்தராமையா காரணம் என்றும் புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பாட்டீலுக்கு உத்தரவிட்டார். அதற்கு பாட்டீல் விளக்கமோ, வருத்தமோ தெரிவிக்க முடியாது என பதில் அளித்தார். இதையடுத்து பாட்டீல் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஏ.கே.அந்தோணி தலைமையிலான காங்கிரஸ் மத்திய மேலிட ஒழுங்கு கமிட்டிக்கு மாநில காங்கிரஸ் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது.

இதையடுத்து பாட்டீல் நாடஹள்ளியை கட்சியிலிருந்து நீக்கி காங்கிரஸ் மேலிடம் உத்தர விட்டுள்ளது. இதனால் காங்கிரஸில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x