Last Updated : 16 Oct, 2019 05:36 PM

 

Published : 16 Oct 2019 05:36 PM
Last Updated : 16 Oct 2019 05:36 PM

முருகனிடம் இருந்து 12 கிலோ நகைகள் மீட்பு: காவிரி ஆற்றில் புதைத்து வைத்திருந்ததாக பெங்களூரு போலீஸ் தகவல்

பெங்களூரு

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடைய முருகன் காவிரி ஆற்றின் கரையில் புதைத்து வைத்திருந்த 12 கிலோ எடையுள்ள தங்க,வைர நகைகளை பெங்களூரு போலீஸார் மீட்டுள்ளனர்.

கடந்த 2ம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியில் ரூ. 13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இவ்வழக்கில் தொடர்புடைய மணிகண்டன், கனகவல்லி, சுரேஷ் உள்ளிட்டோர் போலீசாரிடம் சிக்கிய நிலையில், முக்கிய குற்றவாளியான முருகன்(45) கடந்த 11ம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் மீது பெங்களூருவில் 80‍க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், பொம்மனஹள்ளி போலீசார் 6 நாட்களில் காவலில் எடுத்தனர்.

கடந்த 11ம் தேதி இரவே முருகனிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம் உள்ளிட்டவை குறித்து ரகசிய விசாரணை நடத்தினர். பெங்களூரு போலீஸாரிடம் தானாக முன்வந்து அனைத்து தகவல்களையும் சொல்லி இருக்கிறார். இதையடுத்து போலீஸார் முருகனை 12-ம் தேதி அவர‌து சொந்த ஊரான திருவாரூருக்கு கொண்டுசென்று நகைகளை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

அங்கு காவிரி ஆற்றின் கரையில் நகைகளை புதைத்து வைத்த இடங்களை முருகன் போலீஸாரிடம் காட்டியுள்ளார். அதன்பேரில் பெங்களூரு போலீஸார் நகைகளை தோண்டி எடுத்துள்ளனர். அவ்வாறு கைப்பற்றப்பட்ட 12 கிலோ எடையுள்ள தங்க,வைர, பிளாட்டின‌ நகைகளை நேற்று முன் தினம் பெங்களூரு கொண்டு வந்தனர்.

இந்த நகைகளை பெங்களூரு போலீஸார் நேற்று பத்திரிகையாளர் பார்வைக்கு வைத்தனர். இதுகுறித்து பெங்களூரு மாநகரத்தின் தென்கிழக்கு மண்டல‌ காவல் ஆணையர் இஷா பன்ட் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

'' கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் முருகன் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த மூன்று மாநிலங்களிலும் பெரிய அளவிலான கொள்ளை சம்பவங்களில் அவர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்தந்த மாநில போலீஸார் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, முருகனிடம் விசாரணை நடத்தலாம்.

பொம்மனஹள்ளி போலீசார் முருகனிடம் நடத்திய விசாரணையில் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் கொள்ளையடித்த நகைகளை திருவாரூர் அருகே காவிரி ஆற்றின் கரையில் புதைத்து வைத்திருப்பதாக கூறினார்.

அதன்படி போலீஸார் முருகன் காட்டிய இடங்களில் போலீஸார் தோண்டி, 12 கிலோ எடையுள்ள தங்க, வைர,பிளாட்டின‌ நகைகளை மீட்டுள்ளனர். இதன் மதிப்பு ரூ. 5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தான் நாங்கள் கைப்பற்றியுள்ள அதிகப்பட்ச நகை அளவு ஆகும்.

இப்போதைக்கு இந்த நகைகள் திருச்சி லலிதா ஜூவல்லரிக்கு சொந்தமான நகைகளா? என உறுதியாக சொல்ல முடியாது. நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்து, உரிய அனுமதி பெற்று தமிழக போலீஸார் இந்த நகைகளை பெற்று செல்லலாம்.

முருகனை காவலில் எடுத்தும் விசாரிக்கலாம். எங்களது காவல் விசாரணை புதன்கிழமையுடன் நிறைவடைகிறது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி மேலும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோர முடிவெடுள்ளோம்''என்றார்.

பெங்களூரு போலீஸார் காவிரி ஆற்றின் கரையில் இருந்து நகைகளை தோண்டி எடுத்தது தொடர்பான‌ வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவும், நகைகளை காட்சிப்படுத்திய வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x