Last Updated : 16 Oct, 2019 05:17 PM

 

Published : 16 Oct 2019 05:17 PM
Last Updated : 16 Oct 2019 05:17 PM

டி.கே.சிவகுமாருக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு: 25-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு

புதுடெல்லி

சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கில் கைதாகியுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. அவரது நீதிமன்ற காவல் வரும் 25‍ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதால், டி.கே.சிவகுமார் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே.சிவகுமாரின் வீட்டில் கடந்த ஆண்டு நடந்த வருமான வரி சோதனையில், கணக்கில் வராத ரூ.8.59 கோடி பணம் சிக்கியது. விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறையினர் கடந்த செப்டம்பர் 3ம் தேதி டி.கே.சிவகுமாரை கைது செய்தனர்.

இதையடுத்து அவர் தன் மீதான வ‌ழக்கை ரத்து செய்யக்கோரியும், ஜாமீன் கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்ததால் டி.கே.சிவகுமாருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து அமலாக்கத்துறையினர் டி.கே.சிவகுமாரை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது அமலாக்கத்துறையின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமித் மகாஜன், சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கில் டி.கே.சிவகுமாரிடம் இன்னும் விசாரிக்க வேண்டியுள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் வழக்கு தொடர்புடைய ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது. எனவே டி.கே.சிவகுமாருக்கு ஜாமீன் வழங்க கூடாது''என வாதிட்டார்.

டி.கே.சிவகுமார் தரப்பில் அவருக்கு நீரிழிவு, இரத்த அழுத்தம், முதுகு வலி உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன. எனவே அவருக்கு வீட்டு உணவு, மருந்துகள், நாற்காலி, தொலைக்காட்சி உள்ளிட்டவை வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இதை ஏற்ற‌ நீதிமன்றம், டி.கே.சிவகுமாருக்கு மருந்துகள்,நாற்காலி,தொலைக்காட்சி உள்ளிட்டவை வழங்க உத்தரவிட்டது. மேலும் அவரின் நீதிமன்ற காவலை வரும் 25ம் தேதி வரை நீட்டித்தும் உத்தரவிட்டது. இதையடுத்து டி.கே.சிவகுமார் திஹார் சிறையில் அடைக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் வருத்தமடைந்தனர்.

தாய் மற்றும் மனைவிக்கு சம்மன்

டி.கே.சிவகுமார் மீதான சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் அவரது சகோதரர் டி.கே.சுரேஷ், மகள் ஐஸ்வர்யா, நெருங்கிய ஆதரவாளர் லட்சுமி ஹெம்பல்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அடுத்ததாக டி.கே.சிவகுமாரின் தாய் கவுரம்மா, மனைவி உஷா ஆகியோருக்கு, வருகிற வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x