

அகோலா
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது வெட்கக்கேடானது என பிரதமர் மோடி பேசினார்.
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கு வரும் 21-ம்தேதி சட்டப்பேரவைத் தேர்தலும், 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. இதில் பாஜக 164 தொகுதிகளிலும், சிவசேனா கட்சி 124 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இந்தநிலையில் மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக தாக்கி பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:
சவார்க்கரின் மாபெரும் செயல்களால் தான் நாங்கள் தேசியத்தின் அடிப்படையில் நாட்டை உருவாக்கி வருகிறோம். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது வெட்கக்கேடானது.
மகாராஷ்டிர தேர்தலில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எழுப்பக்கூடாது என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இதனை கூறுவதற்கு எதிர்க்கட்சிகள் வெட்கப்பட வேண்டும். காஷ்மீரில் தீவிரவாதிகளை எதிர்த்து போரிட்டு உயிரிழந்த வீரர்கள் பலர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். அவர்களின் தியாகம் மதிக்கப்பட வேண்டும்.
நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறுவதற்காகவே காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி. அம்பேத்கருக்கு இத்தனை ஆண்டுகளாக பாரத ரத்னா விருது வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.