

புதுடெல்லி
அயோத்தி வழக்கில் இன்று விசாரணை நிறைவுபெறவுள்ள நிலையில், மத்தியஸ்த குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அயோத்தியில் நீண்டகாலமாக பாபர் மசூதி மற்றும் ராம ஜென்ம பூமி நிலப் பிரச்சினை இருந்து வருகிறது. இதில் ஒருமித்த தீர்வு காண்பதற்காக உச்ச நீதிமன்றம் மத்தியஸ்தர்கள் குழுவை கடந்த மார்ச் மாதம் நியமித்தது. இக்குழு வுக்கு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா நியமிக்கப்பட்டார்.
இக்குழுவில் பெங்களூருவில் செயல்பட்டு வரும் வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீரவி சங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் அறிக்கையை கடந்த மாதம் தாக்கல் செய்தனர்.
அப்போது அயோத்தி நில விவகாரத்தில் சமரச முயற்சி கை கூடவில்லை என மத்தியஸ்தர் குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு வழக்கை ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் விசாரித்து விரைவாக முடிக்கப்படும் எனத் தெரிவித்தது.
இதனிடையே மீண்டும் மத்தியஸ்தர் குழுவினர் நடவடிக்கையை தொடங்க வேண்டும் என இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தன. இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் மீண்டும் மத்தியஸ்த குழு தங்கள் நடவடிக்கையை தொடர அனுமதி வழங்கியது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17-ம் தேதி ஓய்வு பெறுவதால் அதற்கு முன் தீர்ப்பு வழங்குவது அவசிய மாகும். இல்லாவிடில் ஒட்டுமொத்த விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்படும்.
எனவே அக்டோபர் 18-ம் தேதிக்குள் அனைத்துத் தரப்பினரும் தங்கள் வாதங்களை முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி உத்தரவிட்டது. மேலும் விசாரணைக்கு இடையே மத்தியஸ்தர் குழு மூலம் மனு தாரர்கள் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள விரும்பினால் அதற்குத் தடையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இறுதி விசாரணை இன்றுடன் நிறைவுபெறவுள்ளது.
அயோத்தி வழக்கில் விசாரணை நடத்த கூடுதல் அவகாசம் கோரிய வழக்கறிஞர்களின் வாதத்தை நிராகரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், போதும், இது போதும், இன்று மாலை 5 மணிக்குள் விசாரணை முடிவடையும் என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்தநிலையில் மத்தியஸ்த குழு தனது விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. எனினும் அந்த அறிக்கையில் என்ன விவரங்கள் இடம்பெற்றுள்ளன என்ற தகவல் வெளியிடப்படவில்லை.