அயோத்தி வழக்கு: விசாரணை இன்றுடன் முடிவு?

அயோத்தி வழக்கு: விசாரணை இன்றுடன் முடிவு?
Updated on
2 min read

புதுடெல்லி

அயோத்தி வழக்கில் விசாரணை இன்றுடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 18-ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் திட்டமிட்டிருந்த நிலையில் 2 நாள் முன்கூட்டியே விசாரணை முடிவடையும் எனக் கூறப்படுகிறது.

அயோத்தி ராம ஜென்ம பூமி பாபர் மசூதி நிலத் தகராறு வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா விராஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்காக மத்தியஸ்தர் குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் நியமித்தது. ஆனால் சமரச முயற்சி தோல்வி அடைந்ததால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடர்ந்து விசாரித்து வருகிறது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17-ம் தேதி ஓய்வு பெறுவதால் அதற்கு முன் தீர்ப்பு வழங்குவது அவசிய மாகும். இல்லாவிடில் ஒட்டுமொத்த விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்படும்.

எனவே, அக்டோபர் 18-ம் தேதிக்குள் அனைத்துத் தரப்பினரும் தங்கள் வாதங்களை முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி உத்தரவிட்டது. மேலும் விசாரணைக்கு இடையே மத்தியஸ்தர் குழு மூலம் மனு தாரர்கள் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள விரும்பினால் அதற்குத் தடையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் தற்போது இறுதி வாதம் நடைபெற்று வருகிறது. ராம் லல்லா சார்பில் வழக்கறிஞர் பராசரன் ஆஜராகி தனது இறுதி வாதத்தை முன் வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை அனைத்து மசூதியும் ஒன்றுதான். தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்று என தனியாக இல்லை. அதேசமயம் இந்த இடத்தைப் பொறுத்தவரையில் இது ராமர் பிறந்த இடம் என்பதால் புனிதமான இடமாகப் பார்க்கிறார்கள்’’ எனக் கூறினார்.

இறுதி வாதம் தொடரும் நிலையில் வழக்கு விசாரணை இன்றுடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 18-ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம திட்டமிட்டிருந்த நிலையில் 2 நாள் முன்கூட்டியே விசாரணை முடிவடையும் எனக் கூறப்படுகிறது.

இதன் பிறகு நீதிபதிகள் தீர்ப்பு எழுத ஒரு மாத கால அளவில் கால அவகாசம் எடுத்துக் கொள்வார்கள். எனவே தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வுபெறும் நவம்பர் 17-ம் தேதிக்குள்ளாக அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in