

பிரதமர்களில் நேரு எந்த அளவுக்கு நேசிக்கப்பட் டாரோ, அந்த அளவுக்கு ஜனாதிபதிகளில் மக்களால் நேசிக்கப்பட்டவர் அப்துல் கலாம்.
அறிவியல் அறிஞராக இருந்தாலும் சாமானிய மக்களி டமும் அரசியல் தலைவர் களிடமும் தனது எளிமையான வாழ்க்கை, நேர்மை, கடின உழைப்பு காரணமாக அளப்பரிய அன்பையும் மரியாதை யையும் பெற்றவர் கலாம். மிக நெருக்கடியான அரசியல் நேரத்தில் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்று பல்வேறு நெருக்கடிகளை வெகு அனாயாசமாக சமாளித்து சிறந்த முன்மாதிரியை உருவாக்கினார்.
பாதுகாப்பு வளர்ச்சி, ஆராய்ச்சி நிறுவனத்தில் இளம் அறிவியல் அறிஞராகப் பணியில் சேர்ந்தபோது, இந்தியத் தரைப்படைக்காக சிறு ஹெலி காப்டரை வடிவமைக்கும் பணிதான் அவருக்கு முதலில் தரப்பட்டது. டாக்டர் விக்ரம் சாராபாய், பேராசிரியர் சதீஷ் தவான், டாக்டர் பிரம்ம பிரகாஷ் போன்ற புகழ்பெற்ற அறிவியல் அறிஞர்களின் கீழ் பணியாற்றும் பெரும் பேறைப் பெற்றார்.
1980-ல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட செயற்கைக் கோள் ஏவுவாகனத்தை (எஸ்.எல்.வி.-3) வடிவமைக்கும் முக்கியப் பணியை கலாம் மேற்கொண்டார். அதன் மூலம்தான் ரோகிணி என்ற செயற்கைக் கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
1963-64ல் நாசாவின் ஆய்வு மையங்களுக்குச் சென்று அதன் செயல்பாடுகளை நேரில் அறிந்தார். 1970 தொடங்கி 1990-கள் வரையில் பி.எஸ்.எல்.வி. ரக ஏவு வாகனங்களைத் தயாரிப் பதிலும் எஸ்.எல்.வி.-3 ரக ஏவு வாகனங்களைத் தயாரிப்பதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.
1992 முதல் 1999 வரை பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகராகவும் பாதுகாப்பு, ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பின் செயலாளராகவும் 1992 ஜூலை முதல் 1999 டிசம்பர் வரையில் பதவி வகித்தார்.
மக்கள் நலனுக்கான விண்வெளி ஆய்விலும் ராணுவத்துக்கான ஏவுகணைத் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றினார். 2002-ல் ஆளும் பாரதிய ஜனதாவும் முக்கிய எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸும் இணைந்து அவரை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தன.
5 ஆண்டுகள் மிகச் சிறப்பான வகையில் கடமையாற்றிய அவர் அதன் பிறகு மீண்டும் கல்வி, எழுத்து, பொதுச் சேவை என்று துடிப்பான பொதுவாழ்வுக்கு திரும்பினார். மிக உயர்ந்த பதவிக்கு வந்த அறிவியல் அறிஞரான கலாம், அரசியல் தலைவர்களிடையேயும் மக்களிடையேயும் நன்மதிப்பைப் பெற்றுத் திகழ்ந்தார். மிகவும் நெருக்கடியான அரசியல் வரலாற்றில் கலாம் ஆற்றிய நடுநிலையான பணி இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. ‘மக்களின் ஜனாதிபதி’ என்று அழைக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்தான்.