

பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி அறிவிக்கப்படுவதற்காக கிரிக்கெட் உலகம் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் மேற்கு வங்க அரசியல் வட்டாரங்கள் மேற்கு வங்க அரசியலில் சவுரவ் கங்குலியின் பங்கு, இடம் என்ன என்பதை ஆராய்ந்து வருகிறது.
48 மணி நேரங்களுக்கு முன்பு கூட சவுரவ் கங்குலி திரிணமூல் தலைவர் மம்தா பானர்ஜியின் தீவிர ஆதரவாளர் என்ற நிலைதான் இருந்து வந்தது. 2015-ல் ஜக்மோகன் டால்மியா மறைவுக்குப் பிறகு மேற்கு வங்க கிரிக்கெட்டின் உயரிய பொறுப்பான வாரியத் தலைவராக கங்குலி வருவதை மம்தா மிகவும் ஆதரித்தார். கங்குலியும் மம்தாவும் அடுத்தடுத்து காணப்படும் பில்போர்டுகள் ஈடன் கார்டனில் வைக்கப்பட்டதும் கங்குலி-மம்தா அரசியல் நெருக்கத்தை உறுதி செய்வதாக இருந்தது.
மம்தா பானர்ஜி தனக்கு அளித்த மேற்கு வங்க கிரிக்கெட் தலைவர் பதவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கங்குலி பிரதமர் மோடி இவரை பாஜகவுக்கு அழைத்ததையும் நிராகரித்தார். ஆனால் பிரதமரின் ஸ்வச் பாரத் தூய்மை இந்தியா திட்டத்துக்கான விழிப்புணர்வு தூதராக இருக்க சம்மதித்தார் கங்குலி.
ஆனால் இவையெல்லாவற்றையும் மறுப்பது போல் டெல்லியில் சனிக்கிழமையன்று கங்குலி, அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய நிகழ்வு நடந்துள்ளது. இதில் பிசிசிஐ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அமித் ஷாவின் செல்வாக்கு மிக்க வாரிசு ஜெய் ஷா, அஸாம் அரசியல் அரங்கின் செல்வாக்கு மிக்க ஹிமாந்தா விஸ்வசர்மா ஆகியோரும் அமித் ஷாவுடனான இந்த சந்திப்பில் இடம்பெற்றிருந்தனர். இதில் மற்றவர்களுடன் அசாம் கிரிக்கெட் சங்கம் பிசிசிஐ தலைவராக கங்குலி வருவதற்கு மிகப்பெரிய ஆதரவை அளிக்க மற்ற போட்டியாளர்களின் வாய்ப்பு மங்கியது.
பிசிசிஐ தலைவர் பதவிக்கு முன்னாள் இந்திய வீரர் பிரிஜேஷ் படேல், டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் ரஜத் சர்மா ஆகியோரும் போட்டியில் இருந்தனர். ஆனால் சவுரவ் கங்குலிக்கு இருந்த ஆதரவு அமித் ஷாவின் இருப்பு ஆகியவற்றினால் போட்டி ஒன்றுமில்லாமல் ஆனதாக மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிசிசிஐ அதிகாரியாக இருந்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் செல்வாக்கும் இதில் பங்களிப்பு செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
திரிணமூல் என்ன நினைக்கிறது?
கங்குலி தைரியமாக கருத்துக்களை கூற கூடியவர், நன்றாகப் பேசக்கூடியவர், நல்ல தோற்றமுடையவர், சூப்பர் ஸ்டார் எனவே அமித் ஷா, மோடிக்கு இவரைப் பிடித்திருப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை. மேலும் தற்போது தன்னால் அரசியலைப் புரிந்து கொள்ள முடியும் என்று நிறுவியுள்ளார்.அவர் ஒரு சாலஞ்சர், என்று கங்குலிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் ஒரு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால் கங்குலி எல்லாம் ஊகங்களே என்று கூறினாலும், கங்குலிக்காக அமித் ஷாவே ஆதரவு கூறுவது உண்மையில் பெரிய விஷயம் என்று பாஜக தரப்பில் வியப்பு வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து 2021 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் கங்குலியின் பங்கு என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் அங்கு தலைதூக்கியுள்ளது.
-சுவோஜித் பக்ஷி