

மும்பை
மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை எம்.பி.யுமான நாராயணன் ரானேயின் கட்சியான மகாராஷ்டிர சுவாபிமான் பக்ஷா கட்சி இன்று பாஜகவுடன் முறைப்படி இணைந்தது.
மகாராஷ்டிர அரசின் பதவிக்காலம் முடிவடைவதால் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
நீண்டகாலமாக கூட்டணியில் உள்ள பாஜகவும், சிவசேனாவும் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. நீண்ட இழுபறிக்கு பிறகு இருகட்சிகள் இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. இரு கூட்டணிகளும் ஆட்சியை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன.
இந்தநிலையில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை எம்.பி.யுமான நாராயணன் ரானேயின் கட்சியான மகாராஷ்டிர சுவாபிமான் பக்ஷா கட்சி இன்று பாஜகவுடன் முறைப்படி இணைந்தது. சிவசேனாவில் இருந்த ரானே பின்னர் காங்கிரஸில் இணைந்தார். பின்னர் தனிக்கட்சி நடத்தி வந்தார். பாஜக கூட்டணியிலேயே அவரது கட்சியும் இடம் பெற்றுள்ளது.
அவரது மூத்த மகன் நிலேஷ் ரானே காங்கிரஸ் சார்பில் முன்பு எம்.பி.யாக இருந்தார். அவரும் இன்று பாஜகவில் இணைந்தார். அவர்களுடன் ஏராளமான சுவாபிமான் கட்சி தொண்டர்களும் பாஜகவில் இணைந்தனர். நாராயண் ரானேயின் இளைய மகன் நிதிஷ் ரானே கங்கவலி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.