

பெங்களூரு
இந்திய குடியரசு கட்சியின் மூத்த தலைவரும், அம்பேத்கரிய சிந்தனையாளருமான எஸ்.கே.ராமசாமி உடல் நலக்குறைவால் கோலார் தங்கவயலில் காலமானார். அவருக்கு வயது 95.
கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் உள்ள என்றீஸ் வட்டத்தைச் சேர்ந்தவர் எஸ்.கே.ராமசாமி (95). பூர்வீக பவுத்த குடும்பத்தில் பிறந்த இவர், சிறுவயதிலே பண்டிதர் அயோத்திதாசரின் தென்னிந்திய பவுத்த சங்கத்தில் இணைந்தார். பண்டிதமணி ஜி.அப்பா துரையார், ஐயாக்கண்ணு புலவர் உள்ளிட்டோருடன் நேரடியாக பழகிய இவர், பாபாசாகேப் அம்பேத்கரின் சித்தாந்தத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
பட்டியல் வகுப்பினர் சம்மேளனத்தில் இணைந்த இவர் தங்க சுரங்கத்தில் பணியாற்றும்போது தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்தார்.
தீண்டாமை கொடுமை, சாதி பாகுபாடு, சனாதன முறை உள்ளிட்டவற்றுக்கு எதிரான செயற்பாடுகளில் தொடர்ந்து இயங்கினார். குறிப்பாக பறை அடிப்பதற்கு எதிராக 1953ல் தங்கவயலில் நடந்த மேள ஒழிப்பு கலகத்தில் முக்கிய பங்காற்றினார்.
எஸ்.கே.ராமசாமி, சி.வி.துரைசாமி, லோகதாஸ் உள்ளிட்டோரின் தீவிர முயற்சியால் தங்கவயலில் சாதியின் பெயரால் பறை அடிக்கும் வழக்கம் முழுமையாக ஒழிக்கப்பட்டது.
பட்டியல் வகுப்பினர் சம்மேளன அமைப்பின் முக்கிய பிரமுகராக இருந்த எஸ்.கே.ராமசாமி 1944ல் அம்பேத்கர் சென்னை வந்த போதும், 1954ல் கோலார் தங்கவயல் வந்த போதும் அவரை சந்திக்கும் வாய்ப்பை பெற்றார்.
அம்பேத்கரின் மறைவுக்கு பின்னர் தொடங்கப்பட்ட இந்திய குடியரசு கட்சியில் இணைந்த இவர், தந்தை என்.சிவராஜ், பள்ளிக்கொண்டா கிருஷ்ணசாமி, தங்கவயலின் முதல் எம்எல்ஏ பி.எம்.சாமி துரை ஆகியோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினையும் பெற்றார்.
1984ல் ''அம்பேத்கரின் தத்துவ முத்துக்கள்''என்ற நூலை எழுதி வெளியிட்ட இவர், தொடர்ந்து அம்பேத்கரின் கருத்துகளை இளைஞரிடையே துண்டறிக்கைகள், படங்கள் வாயிலாக பரப்பி வந்தார். 90 வயதை கடந்த பிறகும் பவுத்த சங்க செயல்பாடுகளில் முனைப்போடு இயங்கினார். அண்மையில் உடல் பாதிக்கப்பட்ட எஸ்.கே.ராமசாமி நேற்று இரவு காலமானார்.
என்றீஸ் வட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட எஸ்.கே.ராமசாமியின் உடலுக்கு இந்திய குடியரசு கட்சி நிர்வாகிகள் சுரேஷ் பாபு,அபி மன்னன்,கே.எஸ்.நடராஜன், சிவராஜ், தென்னிந்திய பவுத்த சங்க நிர்வாகிகள் துரை.ராஜேந்திரன்,வி.ஆர்.சேகர், அசோக் குமார், தங்கவயல் தமிழ்ச்சங்க தலைவர் கலையரசன் உள்ளிட்டோர் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து எஸ்.கே.ராமசாமியின் உடல் சாம்பியன் ரீஃப் கல்லறையில் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.
மூத்த அம்பேத்கரிய சிந்தனையாளர் எஸ்.கே.சாமியின் மறைவு தங்கவயல் இந்திய குடியரசு கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.