

புதுடெல்லி
உ.பி.யின் 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21 இல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு பாஜக வேட்பாளர்களை தோற்கடிக்கக் குறிவைத்திருக்கும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பிரச்சாரம் செய்ய முன்வரவில்லை.
மகராஷ்டிரா மற்றும் ஹரியாணா சட்டப்பேரவைகளுடன் சேர்த்து உபியில் 11 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அக்டோபர் 21-ல் நடைபெறுகிறது. இதில் பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெற்று விடாக் கூடாது என மூன்று முக்கிய எதிர்கட்சிகளும் குறி வைத்துள்ளனர்.
எனினும், இதற்காக சமாஜ்வாதியின் அகிலேஷ்சிங் யாதவ், பகுஜன் சமாஜின் மாயாவதி, காங்கிரஸின் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா வத்ரா என முக்கிய தலைவர்கள் எவரும் பிரச்சாரம் செய்யவில்லை.
இதற்கு, இடைத்தேர்தலில் தம் தலைவர்கள் பிரச்சாரம் செய்யும் வழக்கம் இல்லை எனக் காங்கிரஸ் தலைவர்கள் காரணம் கூறுகின்றனர். மாயாவதியோ, இருமாநில தேர்தலில் முதல்கட்டமாக ஒன்பது பிரச்சாரக் கூட்டங்களை நடத்த உள்ளார்.
இருப்பினும், உ.பி.யின் இடைத்தேர்தலுக்காக அவரது கட்சியின் இரண்டாம்கட்டத் தலைவர்களான மாநிலங்களவ எம்.பியான சதீஷ்சந்த் மிஸ்ரா மற்றும் மாயாவதியின் சகோதரர் மகனுமான ஆகாஷ் ஆனந்த் கூடப் பிரச்சாரம் செய்யவில்லை.
இடைத்தேர்தலிலும் தவறாமல் பிரச்சாரம் செய்து வந்த அகிலேஷ் இந்தமுறை ராம்பூரில் மட்டும் அதை செய்கிறார். இதற்கு அதன் இடைத்தேர்தலில் அங்குள்ள தம் கட்சியின் முக்கியத் தலைவரான ஆசம்கானின் மனைவி தஜீன் பாத்திமா போட்டியிடுவது காரணமாக உள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் ஆசம் கானின் மீது பல்வேறு வழக்குகளை பதிவாகி இருப்பதால் ராம்பூரில் ஆசம்கானின் செல்வாக்கு சரிந்திருப்பதாகக் கருதப்படுகிறது.
இதற்குமுன் கடைசியாக இருமுறை உ.பி.யில் நிகழ்ந்த இடைத்தேர்தலில் பாஜகவிற்கும், சமாஜ்வாதிக்கும் மட்டுமே நேரடிப்போட்டி இருந்தது. ஏனெனில், 2014 இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு செல்வாக்கு குறைந்திருந்தது.
மாயாவதி கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் இருந்தது. பிறகு மக்களவை தேர்தலுக்கு முன்பாக 2018-ல் நடைபெற்ற இரண்டாவது இடைத்தேர்தலில் மாயாவதி தன் ஆதரவை சமாஜ்வாதிக்கு அளித்து விட்டார்.
இதனால், இரு இடைத்தேர்தல்களிலும் சமாஜ்வாதி வெற்றி பெற்றிருந்தது. இந்தநிலை மக்களவை தேர்தலுக்கு பின் முற்றிலும் மாறி எதிர்கட்சிகள் இடையே இருந்த கூட்டணிகள் அனைத்தும் பிரிந்து விட்டன.
இதனால், இடைத்தேர்தலில் கிடைக்கும் வெற்றியை பொறுத்தே உபியில் எதிர்கட்சிகளின் செல்வாக்கு அமையும். இந்த நிலையிலும், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் செய்யாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.