

மும்பை
மோசடிக்கு ஆளாகியுள்ள பிஎம்சி வங்கியில் டெபாசிட் செய்த ரூ. 90 லட்சத்தை எடுக்க முடியாமல் மன அழுத்தத்துக்கு ஆளானஜெட் ஏர்வேஸ் முன்னாள் ஊழியர் மாரடைப்பால் மரணமடைந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மும்பையில் பிஎம்சி எனப்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி கடன் வழங்கியதில் முறைகேடுகள் இருப்பது தெரியவந்ததால் வங்கியின் செயல்பாடுகளை தணிக்கை செய்யவும் அதற்கு முன்பு புதிய கடன் மற்றும் சேமிப்பு திரட்டுவதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்தது. வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஹவுசிங் டெவலப்மெண்ட் மற்றும் இன்பிராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ. 6,500 கோடி வரை பிஎம்சி வங்கி கடன் வழங்கியுள்ளது. இது ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாட்டு வரம்பை விட 4 மடங்கு அதிகமாகும். அத்துடன் வங்கியின் மொத்த சொத்து மதிப்பான ரூ.8,800 கோடியில் 73 சதவீதம் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
பிஎம்சி வங்கி மோசடி தொடர்பாக மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடன் வாங்கிய ஹெச்டிஐஎல் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன் இயக்குநர்கள் சரங் வாத்வான், ராகேஷ் வாத்வான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரூ.3,500 கோடி மதிப்பிலான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. பிஎம்சி வங்கியின் இயக்குநர் ஜாய் தாமஸ் மற்றும் வங்கியின் முன்னாள் தலைவர் வார்யம் சிங்கும் கைதாகியுள்ளனர்.
பிஎம்சி வங்கி மோசடியில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததை உறுதிப்படுத்தியுள்ள அமலாக்கப்பிரிவு இதுதொடர்பாக சோதனைகள் நடத்தி வருகிறது.
பிஎம்சி வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை திருப்பி தரக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து வாடிக்கையாளர்கள் தங்கள் பணம் திரும்பவும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
உயிரிழந்த சோகம்
பிஎம்சி வங்கியில் வைத்துள்ள பணத்தை திருப்பி எடுக்க முடியாமல் தவித்த வாடிக்கையாளர்களில் சஞ்சய் குலாஸ்தியும் (வயது 51) ஒருவர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றிய இவர், அந்த நிறுவனம் நிதி நெருக்கடிக்கு ஆளாகி மூடப்பட்டதால் வேலையிழந்தார்.
அவரது மகனும் சிறப்பு குழந்தை. எனவே அவரது சிகிச்சைக்காக அதிகமான செலவு செய்ய வேண்டிய சூழல் உள்ளது. ஜெட் ஏர்வேஸில் வேலையிழந்த சஞ்சய் தன்னிடம் இருந்த பணம் 90 லட்சம் ரூபாயை பிஎம்சி வங்கியில் டெபாசிட் செய்து இருந்தார்.
இந்தநிலையில் திடீரென வங்கி மோடியால் நெருக்கடிக்கு ஆளாகி தான் டெபாசிட் செய்த பணத்தைகூட எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்று வரை 25 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது.
இதனால் அன்றாட செலவுக்கு கூட பணம் எடுக்க முடியாத சூழலில் நேற்றும் பிஎம்சி வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். தங்கள் பணத்தை உடனடியாக திருப்பி தரக்கோரி அவர்கள் தெற்கு மும்பையில் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் சஞ்சயும் கலந்து கொண்டார். பின்னர் வீடு திரும்பிய அவர் சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொள்ள ரிசர்வ் வங்கி நேற்று இரவு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.