ராகுல் காந்தி பேசட்டும்; அவர் பேசினால் பாஜக-சிவசேனாவுக்கு வாக்கு அதிகரிக்கும்: தேவேந்திர பட்நாவிஸ் கிண்டல்

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்  : கோப்புப்படம்
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் : கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் அதிகம் பேசப்பேச பாஜக-சிவசேனா கூட்டணிக்குத்தான் வாக்குகள் அதிகரிக்கும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் கிண்டல் செய்துள்ளார்.

மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கு வரும் 21-ம்தேதி சட்டப்பேரவைத் தேர்தலும், 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. இதில் பாஜக 164 தொகுதிகளிலும், சிவசேனா கட்சி 124 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

யவத்மால் மாவட்டத்தில் உள்ள பவுசாத் நகரில் நேற்று பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

''காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தின் காட்டமான விமர்சனத்தால், முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் விருப்பமில்லாமல் ஈடுபட்டுள்ளார். தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க முடியாமல் கூட, ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார் என்ற கருத்தால் ராகுல் காந்தி அதிருப்தியில் இருக்கிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 42 இடங்களில் வென்றது. இந்த முறை காங்கிரஸ் கட்சியின் நிலைமை நன்றாகத் தெரிகிறது. அந்தக் கட்சியால் 24 இடங்களுக்கு மேல் வெல்ல முடியாது.

மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய ராகுல் காந்திக்கு விருப்பமில்லை. அதனால்தான் அவர் வெளிநாடு சென்றுவிட்டார்.

வெளிநாட்டில் இருந்து திரும்பிய பின் ராகுல் காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் பழைய கதைகளையே பேசி வருகிறார். ரஃபேல் ஒப்பந்தம், ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு ஆகியவற்றைத்தான் மக்களிடம் மீண்டும் மீண்டும் பேசுகிறார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி இதே பிரச்சினைகளைத்தான் முன்னிறுத்திப் பேசினார். ஆனால், பாஜக மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் மோசமான தோல்வியைச் சந்தித்தது.

ஆதலால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் அதிகமாகப் பேசப்பேச, பாஜக-சிவசேனா கட்சிகளுக்கு வாக்குகள் அதிகரிக்கும்.

கடந்த காலங்களில் இருந்த அரசுகள் விவசாயிகளுக்கு எந்த உதவியையும் முறையாகச் சென்று சேர்க்கவில்லை. ஆனால், பாஜக தலைமையிலான அரசு வந்த பின், விவசாயிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் மானியங்கள், உதவிகள் கிடைத்து வருகின்றன. இடைத்தரகர்கள் தலையீடு இல்லை''.

இவ்வாறு தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்தார்

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in