Published : 13 Oct 2019 06:27 PM
Last Updated : 13 Oct 2019 06:27 PM

இதற்கு முன்பிருந்த பிரதமர்கள் செய்யாததை 56 இன்ச் மார்பு கொண்டவர் செய்துவிட்டார்: பிரதமர் மோடிக்கு அமித் ஷா புகழாரம்  

கோல்காபூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ

கோல்காபூர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான அரசியலமைப்பு 370 பிரிவை நீக்குவதற்கு இதற்கு முன்பு இருந்த எந்த அரசுக்கும் துணிச்சல் இல்லாதபோது, அதை 56 இன்ச் மார்பு கொண்ட மனிதர் செய்துள்ளார்.தேசிய நீரோட்டத்தில் அந்த மாநிலத்தை ஒருங்கிணைத்துள்ளார் என்று பிரதமர் மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டினார்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் வரும் 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலும் 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.

இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. கோல்காபூரில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பங்கேற்றார். அவர் பேசியதாவது:

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முடிவை நீங்கள் ஆதரிக்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா என்று தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் வாக்கு கேட்டு வரும்போது மக்கள் கேள்வி கேட்க வேண்டும்.

தேசத்தின் மக்களும், மகாராஷ்டிரா மக்களும் வாக்களித்து மத்தியில் பாஜகவை 2-வது முறையாக ஆட்சியில் அமர வைத்துள்ளார்கள்.

70 ஆண்டுகளாக காத்திருந்த இந்த தேசத்துக்கும் மக்களுக்கும் மோடி சில விஷயங்கள் செய்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 370 பிரிவை திரும்பப்பெற்றதன் மூலம், தேசிய நீரோட்டத்தில் அந்த மாநிலத்தை இணைத்துள்ளார்.

ஜனசங்கம் தொடங்கப்பட்டதில் இருந்து, ஒரு நாட்டுக்கு இரு பிரதமர்கள், இரு லட்சிணைகள், இரு அரசியலமைப்புகள் இருக்க முடியாது என்று தொடர்ந்து கூறி வந்தது.

ஆனால், இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இணைக்கவும், 370 பிரிவை ரத்து செய்யவும் காங்கிரஸ் கட்சிதான் தடைபோட்டு வந்தது.

370 பிரிவு காஷ்மீரில் இருந்தவரை,தீவிரவாதத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தபோதும் கூட 370 பிரிவை நீக்க வேண்டும் என்று எந்த கட்சிக்கும் தோன்றவில்லை. தேசத்தில் பல அரசுகள் வந்துள்ளன,சென்றுள்ளன. பல பிரதமர்கள் வந்துள்ளார்கள்,சென்றுள்ளார்கள்.

ஆனால், 370 பிரிவை நீக்கும் துணிச்சல் எந்த பிரதமருக்கும் இல்லை.ஆனால் 56 இன்ச் மார்பு கொண்டவர்(பிரதமர் மோடி)தான் இந்த 370 பிரிவை நீக்கியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் தீவிரவாதிகள், இந்தியவீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்தார்கள்.

நம்முடைய படைவீரர்களின் தலையை தீவிரவாதிகள் வெட்டிச் சென்றபோதுகூட, மவுனி பாபாவாக அப்போது இருந்த பிரதமர் மன்மோகன் சிங் அதைக் கண்டித்து ஒருவார்த்தை கூட பேசவில்லை.

ஆனால், உரி, புல்வாமா தாக்குதலுக்குப்பின், பிரதமர் மோடி, தன்னுடைய துணிச்சலை வெளிப்படுத்தி துல்லியத்தாக்குதல், வான் தாக்குதல் மூலம் தீவிரவாதிகளை அழித்துள்ளார்

15ஆண்டுகால காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தில் ஊழல் மலிந்திருந்தது, மாநிலம் 15 இடங்களில் பின்தங்கி இருந்தது.ஆனால், பட்நாவிஸ் முதல்வராக வந்தபின், பாஜக ஆட்சியில் மாநிலம் முதல் 5 இடங்களுக்குள் வந்துள்ளது

இவ்வாறு அமித் ஷா பேசினார்

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x