Published : 13 Oct 2019 03:54 PM
Last Updated : 13 Oct 2019 03:54 PM

3 திரைப்படங்கள் ரூ.120 கோடி வசூல் என்று கூறி பொருளாதார மந்தநிலையை மறுத்த ரவிசங்கர் பிரசாத்: கருத்தை வாபஸ் பெறுவதாக தெரிவிப்பு

3 திரைப்படங்கள் ஒரே நாளில் ரூ.120 கோடி வசூல் அள்ளியுள்ளது என்று கூறி நாட்டின் பொருளாதார மந்தநிலையை மறுத்ததையடுத்து சமூகவலைத்தளங்களிலும் அரசியல் தளத்திலும் கடும் விமர்சனங்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தன் கருத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.

ரவிசங்கர் பிரசாத் இதை மட்டும் கூறியிருந்தால் சிக்கல் எழுந்திருக்காது, ஆனால் என்.எஸ்.எஸ்.ஓ. நாட்டின் வேலையில்லாத் திண்டாட்ட விகிதம் 2017-ல் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது என்று கூறிய புள்ளி விவரத்தையும் இந்தியப் பொருளாதார மந்த நிலை பற்றிய பன்னாட்டு நிதியத்தின் அறிக்கையையும் மறுத்து பாலிவுட் வசூலை வைத்து ஈடுகட்டி பொருளாதார மந்த நிலை இல்லை என்று பேசியது கடும் விவாதங்களையும் ஆன்லைனில் கேலிகளையும் உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இன்று அறிக்கை வெளியிட்டுள்ள ரவிசங்கர் பிரசாத், தன்னுடைய பேச்சில் ஒருபகுதி அதன் கூற்றிடச் சூழலிலிருந்து பிரிக்கப்பட்டு திர்க்கப்பட்டது என்றும் மேலும் உணர்வுபூர்வமானவர் என்பதால் தன் கருத்தை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்தார்.

“ஒரேநாளில் மும்பையில் 3 படங்களின் வசூல் ரூ.120 கோடி என்ற எனது கருத்து புள்ளி விவர அடிப்படையில் சரியானதே. இந்தியாவின் திரைப்பட தலைநகரான மும்பையில் நான் இருப்பதால் இதனைக் கூறினேன். நம் திரைப்படத் துறை குறித்து பெருமையடைகிறேன், இந்தத் துறை லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது, வரிகள் மூலம் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பும் செய்து வருகிறது.

அதே போல் பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசு எடுத்து வரும் முயற்சிகளையும் விளக்கியிருந்தேன். என்னுடைய உரையாடல் பற்றிய முழு வீடியோவும் என்னுடைய சமூக வலைத்தளத்தில் உள்ளது ஆனாலும் என்னுடைய பேச்சின் ஒரு பகுதி அதன் கூற்றிடச்சூழலிலிருந்து அகற்றப்பட்டு திரிக்கப்பட்டுள்ளது என்னை வருத்தமடையச் செய்கிறது. நானும் உணர்வுபூர்வமானவன் என்பதால் என்னுடைய கருத்தை வாபஸ் பெறுகிறேன்” என்றார் ரவிசங்கர் பிரசாத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x