

புதுடெல்லி,
ஏர் இந்தியாவைச் சேர்ந்த விமானிகள், சம்பளம் மற்றும் பதவி உயர்வு குறித்த கோரிக்கைகள் மீது எந்த சாதகமான நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் அதிருப்தி அடைந்த 120 பேர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.
ஏர் இந்தியா நிர்வாகம், இண்டிகோ ஏர், கோ ஏர், விஸ்டாரா மற்றும் ஏர் ஏசியா, இந்திய விமான நிறுவனங்கள் ஏர்பஸ் ஏ 320 விமானங்களை இயக்குகின்றன. இதில் 2000க்கும் மேற்பட்ட விமானிகள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் 400 பேர் உயரதிகாரி பதவியில் நிர்வாகிகளாக உள்ளவர்கள்.
ஏர் இந்தியா விமானிகளில் சில விமானிகளுக்கு சம்பள உயர்வு பதவி உயர்வு வழங்கப்படாமலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் அதிருப்தியடைந்த 120 விமானிகள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் நிர்வாகத்தில் பாதிப்பில்லை என்ற போதிலும் ராஜினாமா வருத்தம் அளிப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் ராஜினாமா செய்த ஒரு விமானி ஏஎன்ஐயிடம் கூறியதாவது:
''ஏர் இந்தியா நிர்வாகம் எங்கள் குறைகளை கேட்டிருக்க வேண்டும் வேண்டும். சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு தொடர்பான எங்கள் கோரிக்கை அவர்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது, ஆனால் அவர்கள் ஒரு வலுவான உத்தரவாதத்தை எங்களுக்கு வழங்கத் தவறிவிட்டனர். எங்கள் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவையாகும்.
விமானிகள் பெரும் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதால், துன்பங்களை எதிர்கொள்கின்றனர். நாங்கள் விமானிகள் என்றபோதிலும்கூட எங்கள் சம்பளத்தை உரிய தேதியில் பெற்றதில்லை.
ஏர் இந்தியாவில் பணிநியமனம் பெறும் விமானிகள் குறைந்த சம்பளத்துடன் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுகிறார்கள். நியமனத்தின்போது என்ன சம்பளமோ அதேதான் ஐந்து ஆண்டுகள் சேவைபுரிந்தாலும என்ற நிலை உள்ளது. மேலும் அவர்கள் அனுபவம் பெற்றவர்கள் என்பதால் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் என்று நம்புகிறார்கள், அதில் எந்தத் தவறுமில்லை. ஆனால் இத்தகைய கோரிக்கைகளால் எந்தப் பயனும் இல்லை என்பது தெரிகிறது.''
இவ்வாறு ராஜினாமா செய்த ஒரு விமானி தெரிவித்தார்.
இன்னொரு பக்கம், ராஜினாமா செய்த விமானிகளுக்கு வேறு இடங்களில் வாய்ப்புள்ளது என்கிறார்கள். தற்போது சந்தை திறந்த நிலையில் இருப்பதால் அதிருப்தி அடைந்த விமானிகள் வேறு எங்காவது வேலை பெறுவார்கள் என்பது உறுதி என்றும் சில விமானிகள் தெரிவித்தனர்.
120 பேர் ஒட்டுமொத்த ராஜினாமா காரணமாக தேசிய விமானத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படுமா என்று கேட்கப்பட்டபோது, ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
''ஏர் இந்தியா நிறைய உபரி விமானிகளைக் கொண்டுள்ளது. ராஜினாமா காரணமாக ஏர் இந்தியாவின் நடவடிக்கை எந்த காரணத்தினாலும் பாதிக்கப்படாது. ராஜினாமா வருத்தம் அளிக்கிறது'' என்றார்.