Published : 13 Oct 2019 11:01 AM
Last Updated : 13 Oct 2019 11:01 AM

25 ஆண்டுகளுக்கு முன் பாலில் கலப்படம்: உங்களுக்கு கருணை காட்ட கூடாது: தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பால் வியாபாரி 25 ஆண்டுகளுக்கு முன் பாலில் கலப்படம் செய்த வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

உங்களுக்கு கருணை காட்டினால், பாலியல் பலாத்காரக் குற்றவாளிகளும், கொலைக் குற்றவாளிகளும் கருணை கேட்பார்கள், விரைவில் சரணடையுங்கள் என்று உச்ச நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்தனர்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பால் வியாபாரி ராஜ் குமார். கடந்த 1995-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இவரிடம் இருந்த பாலை மாநில உணவுத் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மாதிரி எடுத்து சோதனை செய்தனர்.

அதில் நிர்ணயிக்கப்பட்ட அளவான பாலின் கொழுப்பில்லாத சத்து 8.5 சதவீதத்தில் இருந்து குறைவாக 7.7 சதவீதம் மட்டுமே இருந்தது, கொழுப்புச் சத்து 4.6 சதவீதம் மட்டுமே இருந்தது.

இதுதொடர்பாக மாநில உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ராஜ் குமார் மீது உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் ராஜ்குமாருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து செசன்ஸ் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்திலும் ராஜ் குமார் மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிமன்றங்கள் ராஜ் குமாருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறையை உறுதி செய்தன. இதனால் ராஜ் குமார் தனக்கு விதிக்கப்பட்ட 6 மாத கால தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜ் குமாருக்கு விதிக்கப்பட்ட 6 மாத தண்டனையை கடந்த 4-ம் தேதி உறுதி செய்தனர்.

இந்நிலையில் தனக்கு உறுதி செய்யப்பட்ட 6 மாத சிறையை உச்ச நீதிமன்றம் உச்ச பட்ச அதிகாரத்தை பயன்படுத்தி மறுபரிசீலனை செய்ய வேண்டும், அரசியலமைப்பு பிரிவு 142 பயன்படுத்தி முழுமையான நீதி வழங்கி தண்டனையைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி ராஜ் குமார் மீண்டும் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இருவரும், ராஜ்குமார் தரப்பை கடுமையாக விமர்சித்தனர். நீதிபதிகள் கூறியதாவது:

" பாலில் கலப்படம் செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள குற்றவாளி ராஜ்குமாருக்கு எந்தவிதத்தலும் இரக்கம் காட்ட முடியாது. உச்ச நீதிமன்றத்தின் உச்ச பட்ச அதிகாரத்தை பயன்படுத்தி அவரை நாங்கள் விடுவித்தால், அது சட்டத்தையே கேலிக்கூத்தாக்கிவிடும்.

மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றான பாலில் கலப்படம் செய்வது தீவிரமானக் குற்றமாகும். அரசியலமைப்பு சட்டம் 142 பிரிவை எந்தவிதத்திலும் தவறாகப் பயன்படுத்தமாட்டோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, அதில் சந்தேகமும் இல்லை.

சட்டத்தை நிச்சயம் கேலிக்கூத்தாக்க மாட்டோம். பாலில் கலப்படம் செய்வது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல்நலத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இதுபோன்ற குற்றத்துக்கு சட்டத்தில் 6 மாதங்கள் வரை தண்டனை உண்டு. இந்த தண்டனை நாங்கள் குறைக்க முடியாது. விரைவில் ராஜ் குமார் சரணடைய வேண்டும்.

இதுபோன்ற மனுக்களை நாங்கள் ஆதரிப்பதும், விசாரிப்பது கூடாது.. இன்று பாலில் கலப்படம் செய்தவருக்கு நாங்கள் மன்னிப்பு அளித்து தண்டனையைக் குறைத்தால், நாளை கொலைக் குற்றவாளிகளும், பலாத்காரம் செய்வதர்களும் இதுபோன்ற இரக்கம் காட்டக்கேட்பார்கள்.

இன்று நாங்கள் அரசியலமைப்பு 142பிரிவைப் பயன்படுத்தி பாலில் கலப்படம் செய்தவருக்கு குறைந்தபட்ச தண்டனையோ அல்லது விடுவிப்பு செய்தால், இதைப் பிரிவை பயன்படுத்த கொலைக்குற்றவாளிகளும், பலாத்காரக் குற்றவாளிகளும் கோருவார்கள். ஆதலால் அரசியலமைப்பு 142 பிரிவு தவறாகப்பயன்படுத்தப்படாது.

பால் போன்ற அத்தியாவசிப் பொருட்களின் தரம் உயர்ந்த அளவில் இருக்க வேண்டும். தரமற்ற பால் மனித உடலுக்கும் கேடு, மனிதர்களுக்கும் உகந்தது அல்ல. பாலின் தரம் சிறிதளவு குறைந்தாலும் அதற்கு மன்னிப்பு கிடையாது"

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x