Published : 13 Oct 2019 07:58 AM
Last Updated : 13 Oct 2019 07:58 AM

முன்னாள் துணை முதல்வரின் உதவியாளர் தற்கொலை- கர்நாடகாவில் வருமான வரி சோதனை நெருக்கடி காரணமா?

இரா.வினோத்

பெங்களூரு

கர்நாடக முன்னாள் துணை முதல் வர் பரமேஷ்வராவுக்கு நெருக்க மானவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்துவரும் நிலையில், அவரது உதவியாளர் ரமேஷ் பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக முன்னாள் காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வராவின் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிலையங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல அவரது சகோதரர் ஷிவ பிரசாத், உதவியாளர் ரமேஷ் மற்றும் நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகம் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

பரமேஷ்வராவுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது ரூ.30 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக நடத்திய சோதனையில் ரூ.8 கோடி ரொக்க பணமும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய பரமேஷ்வரா, ஷிவ பிரசாத், உதவியாளர் ரமேஷ் உள்ளிட்டோருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி வருமான வரித் துறை நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் ரமேஷ் நேற்று காலை 10 மணியளவில் பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்துக்கு சென்று, தனது நண்பர் குமாரை செல்போனில் தொடர்புகொண்டுள்ளார். அப்போது அவர், ‘‘எனது வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். நான் செய்யாத குற்றத்தை எல்லாம் ஒப்புக்கொள்ளுமாறு அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். எனக்கு சம்பந்தமில்லாத பல விஷயங்களில் என்னை தொடர்புபடுத்தி வழக்கு போடப் போவதாக சொல்கிறார்கள். இதனால் எனக்கு சாவதை தவிர வேறு வழியில்லை. எனவே நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். எனது பிள்ளைகளையும், குடும்பத்தையும் பார்த்துக்கொள்'' எனக் கூறிவிட்டு, செல்போன் அழைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குமார், பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்துக்கு விரைந்து சென்று பார்த்த போது, அங்கு ரமேஷ் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஞானபாரதி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, போலீஸார் அங்கு சென்று ரமேஷின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஞானபாரதி போலீஸார் பெங்களூரு பல்கலைக்கழக வளா கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரமேஷின் காரை கைப்பற்றினர். அதில் சோதனை நடத்தியபோது ரமேஷ் கடைசியாக எழுதிய தற்கொலை கடிதம், செல்போன், லேப்டாப், பென் டிரைவ் உள்ளிட்டவை சிக்கின. தற்கொலை கடிதத்தில், வருமான வரித் துறை சோதனையால் மன உளைச் சலுக்கு ஆளானதாகவும், அதிகாரி களின் நெருக்கடியின் காரணமாகவே தற்கொலை செய்துகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கடும் கண்டனம்

வருமான வரி சோதனையை தொடர்ந்து பரமேஷ்வராவின் உதவியாளர் ரமேஷ் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ், முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கடும் கண்டனமும், ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பரமேஷ்வரா கூறுகையில், “கடந்த 10-ம் தேதி வருமான வரித் துறை அதிகாரிகள் ரமேஷ் வீட்டிலும் சோதனை நடத்தினர்.

கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த ரமேஷை தைரியமாக இருக்குமாறு ஆறுதல் கூறினேன். சனிக்கிழமை காலையில் அவரை காணவில்லை என ரமேஷின் மனைவி எனக்கு தகவல் கொடுத்தார். அதன் பின்னர் நானும் ஆட்களை அனுப்பி தேடினேன். ரமேஷின் மரணத்துக்கு அதிகாரிகளும், அவர் களை தூண்டிவிட்ட அரசியல் தலைவர்களுமே காரணம்” என்றார்.

தற்கொலை செய்துகொண்ட ரமேஷ் ராம்நகர் மாவட்டம் மெலெஹள்ளியை சேர்ந்தவர். ரமேஷுக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x