Published : 12 Oct 2019 04:37 PM
Last Updated : 12 Oct 2019 04:37 PM

பிக் பாஸுக்கு எதிர்ப்பு: சல்மான் கான் வீட்டு எதிரே ஆர்ப்பாட்டம்; 20 பேர் கைது

இந்தி பிக்பாஸ் ரியாலிடி ஷோவில் இடம்பெறும் காட்சி.

மும்பை,

இந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலிவுட் நடிகரும் இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிரபலமான ரியாலிட்டி ஷோவான “பிக் பாஸ்” சீசன் 13 இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டதிலிருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளது. அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) உட்பட பல அமைப்புகள் இந்த நிகழ்ச்சிக்கு தடை கோரியுள்ளன, இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும் 'என்றென்றும் படுக்கை நண்பர்கள்' என்ற கருத்துக்கு ஆட்சேபனை எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சி ஆபாசமானது என்றும் இது இந்திய கலாச்சாரத்தை கெடுக்கும் என்றும் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கலாச்சாரத்தை இழிவுபடுத்துகின்றன என்று கூறி அதற்கு தடை கேட்டு உ.பி. பாஜக எம்எல்ஏ ஒருவரும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதேபோல 'பிக் பாஸ்' இந்து கலாச்சாரத்தையும் பாரம்பரியங்களையும் அவமதிப்பதாக உள்ளது என்று கர்ணி சேனா தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியது,

இப்போது, ​​ராஜஸ்தானை தளமாகக் கொண்ட கர்ணி சேனா இந்த நிகழ்ச்சிக்கு எதிராக புகார் அளித்ததாக கூறப்படுகிறது. புகாரை அடுத்து, நிகழ்ச்சி தொகுப்பாளரான சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே மும்பை போலீசார் பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளனர்.

சல்மானின் வீட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், உபதேஷ் ராணா என்பவர் சல்மானின் வீட்டிற்கு வெளியே நின்று சல்மானுக்கும் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கும் பிக் பாஸ் வீட்டின் ஆபாசக் காட்சிகளைப் பரப்புவதை நிறுத்துமாறு எச்சரிக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

- ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x