

புதுடெல்லி
டெல்லி முன்னாள் ஆம் ஆத்மி எம்எல்ஏ அல்கா லம்பா இன்று முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் அல்கா லம்பா. கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சி நடவடிக்கையில் இருந்து சிறிது காலம் விலகியிருந்தார்.
ஆம் ஆத்மி கட்சியை விட்டு விலகிவிட்டதாக கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அவர் காங்கிரஸில் இணையக்கூடும் என தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அவர் மீது கட்சித் தாவல் தடை சடத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகர் ராம் நிவாஸ் கோயலிடம் ஆம் ஆத்மி எம்எல்ஏ சவுரப் பரத்வாஜ் மனு அளித்தார்.
இதன் அடிப்படையில் அல்கா லம்பாவை சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த தகுதி நீக்கம் செப்டம்பர் 6-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அவர் அறிவித்தார்.
இந்தநிலையில் அவர் இன்று முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் பி.சி.சாக்கோ முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார்.
டெல்லியில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அல்கா லம்பா போட்டியிடக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.