Published : 12 Oct 2019 02:55 PM
Last Updated : 12 Oct 2019 02:55 PM

வருமான வரித் துறை சோதனையை தொடர்ந்து பரமேஸ்வரா உதவியாளர் மர்ம மரணம்

பெங்களூரு

கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பரமேஸ்வராவுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற நிலையில் அவரது தனி உதவியாளர் ரமேஷ் தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் முதல்வராக குமாரசாமி பதவி வகித்தபோது கூட்டணி அரசில் துணை முதல்வர் பதவி வகித்தவர் பரமேஸ்வரா. காங்கிரஸ் மூத்த தலைவரான இவர் கட்சியில் நீண்டகாலம் பணியாற்றி வருபவர்.

இந்தநிலையில் தும்கூரூ உள்ளிட்ட இடங்களில் உள்ள பரமேஸ்வராவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான மருத்துவக்கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு முறைகேடு புகாரில் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியானது.

இதுபோலவே கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜலப்பாவுக்கு சொந்தமான கோலார் மருத்துவக் கல்லூரியிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. மொத்தம் 25 இடங்களில் வருமான வரித்தறை சோதனைகள் நடைபெற்றன.

இந்த சோதனையில் 5 கோடி ரூபாய் ரொக்கப்பணம் கைபற்றப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது. மருத்துவ கல்லூரிகளில் கறுப்பு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும் வெளியான தகவல் அடிப்படையில் வருமான வரி சோதனை நடைபெற்றுள்ளது.

இந்தநிலையில் பரமேஸ்வராவின் தனி உதவியாளர் ரமேஷ் என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. பரமேஸ்வராவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் ரமேஷிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையின்போது விசாரணை நடத்தினர்.

அவர் தற்கொலை செய்து கொண்டாரா எனவும், அவரது மரணத்துக்கு காரணம் என்ன எனவும் கர்நாடக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரமேஷின் மர்ம கர்நாடக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x