

புதுடெல்லி
உண்மையான தலைவர் உதாரணத்தின் மூலமே வழிநடத்துவார் என பிரதமர் மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான 2-ம் கட்ட அதிகாரபூர்வமற்ற சந்திப்பு மாமல்லபுரத்தில் நடந்த வருகிறது. கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் தங்கியுள்ள மோடி, கடற்கரையில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை இன்று வெளியிட்டுள்ளார். அதில் கோவளத்தில் உள்ள கடற்கரையில் இன்று காலை பிரதமர் மோடி தனி ஆளாக பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்த வீடியோ அதில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில் ‘‘ஒரு உண்மையான தலைவர் உதாரணத்தின் மூலமே வழிநடத்துவார். சுகாதார சீர்கேட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் முயற்சிக்கு நன்றி. அவரின் ஸ்வச்ச பாரத் மற்றும் சம்ருத பாரத் முயற்சியை நாம் பின் தொடருவோம்’’ என கூறியுள்ளார்.