

அகமதாபாத்
அமித் ஷா தொடர்பாக தெரிவித்த கருத்து தொடர்பான அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ‘‘எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஏன் திருடர்கள் அனைவரின் பெயருக்கு பின்னால் மோடி என்ற பெயர் இருக்கிறது. நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி இன்னும் எத்தனை மோடிக்கள் வருவார்களோ, யாருக்கு தெரியும் " என்று பேசினார்.
இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்ககோரி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜரானார்.
இந்தநிலையில் மற்றுமொரு அவதூறு வழக்கு தொடர்பாக அகமதாபாத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று ஆஜரானார். ஜபல்பூரில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அமித் ஷாவை கொலை குற்றவாளி என பேசினார்.
இதுதொடர்பாக பாஜக கவுன்சிலர் கிருஷ்ணவதன் தொடர்ந்த வழக்கு அகமதாபாத் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி இன்று ஆஜரானார். அப்போது நான் குற்றவாளி அல்ல என ராகுல் காந்தி தெரிவித்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் வழக்கை டிசம்பர் 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.