Published : 11 Oct 2019 03:44 PM
Last Updated : 11 Oct 2019 03:44 PM

காஷ்மீர் விவகாரத்தில் ராகுல் காந்தி நிலைப்பாடு என்ன?: அமித் ஷா கேள்வி

சிக்லி

காஷ்மீர் விவகாரத்தில் ராகுல் காந்தி தனது நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாகக் கூற வேண்டும். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் தங்களின் குடும்ப நலனுக்காவே உழைக்கின்றன என்று பாஜக தேசியத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா குற்றம்சாட்டினார்.

மகாரஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 21-ம் தேதி தேர்தலும், 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

இந்நிலையில், புல்தானா மாவட்டம், சிக்லி நகரில் இன்று பாஜக, சார்பில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சியின் இங்கிலாந்து பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள், இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியின் ஜெரெமி கோர்பினிடம் காஷ்மீர் விவகாரம் குறித்து கலந்து பேசியுள்ளார்கள். காங்கிரஸ் கட்சியினரின் இதுபோன்ற செயலுக்கு ராகுல் காந்தி கண்டிப்பாக மன்னிப்பு கோர வேண்டும்.

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையீடு கூடாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது. காஷ்மீர் விவகாரம் என்பது உள்நாட்டு விவகாரம். ஆதலால், ராகுல் காந்த காஷ்மீர் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.

காஷ்மீருக்கான அரசியலமைப்பு 370 பிரிவு நீக்கப்பட்டதை எதிர்க் கட்சியினர் விமர்சிக்கிறார்கள். ஆனால், இந்த தேசமே பிரதமர் மோடியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை புகழ்ந்து வருகின்றன.

காங்கிரஸ் கட்சியும், என்சிபி கட்சியும் தங்களின் குடும்ப நலத்துக்காக பணியாற்றுகின்றன. ஆனால், சிவசேனா கட்சியும், பாஜகவும் மட்டுமே நாட்டின் நலனுக்காக பணியாற்றுகிறார்கள்.

மோடி 2-வது முறையாக பிரதமராக வந்தபின், அரசியலமைப்பு 370- பிரிவையும், 35 ஏ பிரிவை நீக்கியதும்தான் எடுக்கப்பட்ட முதல் முடிவு. இந்த நீக்கத்தின் மூலம் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது.

இதற்கு முன் இருந்த எந்த பிரதமரும் காஷ்மீர் விவகாரத்தை தொட்டது இல்லை. ஆனால், பிரதமர் மோடி அதைச் செய்துள்ளார். இன்று காஷ்மீரின் இந்தியாவின் ஒருபகுதியாக மாறிவிட்டது.

காஷ்மீரில் 370 பிரிவை நீக்கினால் அங்கு ரத்தஆறு பாயும் என்று காங்கிரஸ் கட்சியின் குலாம்நபி ஆசாத் அச்சுறுத்தினார். ஆனால், ஒரு சொட்டு ரத்தம் கூட அங்கு விழவில்லை. பாஜகவைப் பொறுத்தவரை வாக்கு வங்கியைக் காட்டிலும், நாட்டின் நலன்தான் முக்கியம்.

மகாராஷ்டிரா தேர்தலுக்கும், காஷ்மீரின் 370 பிரிவுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று கேட்கிறார்கள். இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீர் இருக்க வேண்டும் என்று தேசத்தின் மக்கள் விரும்பினார்கள், அதை பிரதமர் மோடி செய்துள்ளார்

காஷ்மீரில் 370 பிரிவு நீக்கப்பட்டபின் மகாராஷ்டிராவிலும், ஹரியானாவிலும் நடக்கும் தேர்தல் இதுவாகும். இந்த முக்கியமான பிரச்சினையில் மக்கள் எவ்வாறு ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டவே இந்த மிக பெரிய வாய்ப்பாகும்.

தேசிய குடிமக்கள் பதிவேடு வரும் 2024-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும், அதன்பின் நாட்டுக்குள் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் வெளியற்றப்படுவார்கள்

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x