

புதுடெல்லி
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 3.30 கோடிக்கும் அதிகமான வழக்குகள் தீர்வு காணப்படாமல் தேக்கமடைந்து இருப்பதால், விரைவாக முடிப்பதற்கான வழிகளையும், தாமதத்தை தவிர்க்கும் வழிகளையும் தேடுங்கள் என்று மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
நீதிமன்றங்களில் ஏராளமாகக் குவிந்து கிடக்கும் வழக்குகளைக் குறைக்க, கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை சட்டத்துறை அமைச்சகம் எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
மாவட்ட அளவிலான நீதிமன்றங்களில் மட்டும் தீர்வு காணப்படாமல் பல்வேறு ஆண்டுகளாக 2.84 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. உயர் நீதிமன்றங்களில் 43 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளும், உச்ச நீதிமன்றத்தில் 60 ஆயிரம் வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன.
மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் உத்தரப் பிரதேசத்தில் 61 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 33.22 லட்சம் வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 17.59 லட்சம் வழக்குகளும், பிஹாரில் 16.58 லட்சம் வழக்குகளும், குஜராத்தில் 16.45 லட்சம் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
அதிலும் குஜராத், மகாராஷ்டிராவில்தான் கீழ் நீதிமன்றங்களில் அதிகமான அளவில் வழக்குகள் தீர்வு காணப்படாமல் இருக்கின்றன. 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தீர்வு காணப்படாமல் இருக்கும் வழக்குகளால் பெரும்பாலும் ஏழைகள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.
மேலும், சிறையில் கைதிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏராளமான கைதிகள் முழுமையான விசாரணையின்றி, விசாரணைக் கைதிகளாகவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவற்றைத் தவிர்க்க வழக்குளை விரைவாக முடித்தல் அவசியம்.
கோடிக்கணக்கிலான வழக்குகள் நிலுவையில் இருப்பது தொடர்பான கோப்புகளைப் பார்த்து சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் பிரதமர் மோடி சமீபத்தில் பேசியுள்ளார். அப்போது, முறையான நடவடிக்கை எடுத்து நிலுவை வழக்குகளைக் குறையுங்கள். அதற்குத் தேவையான நடவடிக்கை எடுங்கள் என ரவிசங்கர் பிரசாத்துக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன
கடந்த மாதம் 25-ம் தேதி மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம், நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதில் சட்ட வல்லுநர்களை அழைத்து நிலுவை வழக்குகளைக் குறைப்பதற்கான ஆலோசனைகளைக் கேட்டுள்ளது.
இதுதொடர்பாக நீதித்துறையின் இணைச்செயலாளர் ஜி.ஆர்.ராகவேந்தர் அமைச்சகத்தின் அனைத்துப் பிரிவுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் விரைவாக வழக்குளை முடிக்க நீதித்துறைக்கு தேவையான ஒத்துழைப்பையும், அதற்கான வழிகளையும் ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.
பல்வேறு மாநிலங்களில் மாவட்ட அளவிலும், அதற்குக் கீழ் உள்ள நீதிமன்றங்களிலும் முறையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வந்தது. இதைக் குறிப்பிட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார்.
அதில் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகப்படுத்த வேண்டும். காலியாக இருக்கும் இடங்களில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும். 37 சதவீத நீதிபதி இடங்கள் காலியாக இருக்கின்றன என்று வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
,ஐஏஎன்எஸ்