

பெங்களூரு
கர்நாடகாவில் முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வரா உள்ளிட்டோருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 5 கோடி ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் முதல்வராக குமாரசாமி பதவி வகித்தபோது கூட்டணி அரசில் துணை முதல்வர் பதவி வகித்தவர் பரமேஸ்வரா. காங்கிரஸ் மூத்த தலைவரான இவர் கட்சியில் நீண்டகாலம் பணியாற்றி வருபவர்.
இந்தநிலையில் தும்கூரூ உள்ளிட்ட இடங்களில் உள்ள பரமேஸ்வராவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான மருத்துவக்கல்லூரியில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு முறைகேடு புகாரில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோலவே கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜலப்பாவுக்கு சொந்தமான கோலார் மருத்துவக் கல்லூரியிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இரண்டாவது நாளாக இன்றும் 25 இடங்களில் வருமான வரித்தறை சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சோதனையில் 5 கோடி ரூபாய் ரொக்கப்பணம் கைபற்றப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த மருத்துவ கல்லூரிகளில் கறுப்பு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிடிஐ