Published : 11 Oct 2019 10:56 AM
Last Updated : 11 Oct 2019 10:56 AM

முத்தலாக் தடைச் சட்டத்துக்கு நன்றி: பிரதமர் மோடிக்கு கோயில் கட்டும் முஸ்லிம் பெண்கள்

முசாபர்நகர்

உத்தரப் பிரதேசம், முசாபர் நகர் மாவட்டத்தில் முஸ்லிம் பெண்களில் ஒரு பிரிவினர், முத்தலாக் தடைச் சட்டத்தை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்குக் கோயில் கட்ட முடிவு செய்துள்ளனர்.

தாங்கள் எடுத்த முடிவு தொடர்பாக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, முஸ்லிம் பெண்கள் மனு அளித்து அனுமதி கோரினார்கள்.

இதுகுறித்து முஸ்லிம் பெண்கள் குழுவின் பிரதிநிதி ரூபி காஸ்னி நிருபர்களிடம் கூறுகையில், "முஸ்லிம் பெண்களுக்கு இருந்த மிகப்பெரிய தடையான முத்தலாக்கில் இருந்து மீட்ட பிரதமர் மோடிக்கு நன்றி செலுத்தப் போகிறோம். முத்தலாக்கைத் தடை செய்து எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளார் பிரதமர் மோடி.

எங்களுக்கு இலவசமாக கேஸ் அடுப்புகள், இணைப்புகள், இலவச வீடுகளை பிரதமர் மோடி அரசு வழங்கியுள்ளது. இதைக்காட்டிலும் எங்களுக்கு வேறு என்ன தேவை? பிரதமர் மோடியை உலகமே கொண்டாடி வரும்போது, சொந்த மண்ணில் அவரைக் கொண்டாட வேண்டாமா?

ஆதலால், எங்களுடைய சேமிப்பைப் பயன்படுத்தி பிரதமர் மோடிக்காக நாங்கள் கோயில் கட்ட விரும்புகிறோம். இதற்கான அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். அரசிடம் இருந்தோ, தனியார் நிறுவனங்களிடம் இருந்தோ எந்தவிதமான நிதியையும், இடத்தையும் பெறவில்லை.

முஸ்லிம் பெண்கள் பிரதமர் மோடிக்கும், அவரின் கொள்கைகளுக்கும் ஆதரவாக இருக்கிறோம் என்பதை தெளிவாகக் கூறவே இதைச் செய்கிறோம்" எனத் தெரிவித்தார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x