Published : 17 Jul 2015 04:18 PM
Last Updated : 17 Jul 2015 04:18 PM

விலைக் கட்டுப்பாட்டின் கீழ் மேலும் 39 மருந்துகள்

நீரிழிவு, கிருமி தொற்று, சீரண ஒழுங்கின்மைகள் குறித்த நோய்களுக்கான மருந்துகள் உட்பட மேலும் 39 மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.

ரிசர்ச் பார்மா துணைத் தலைவர் சரப்ஜித் கவுர் நாங்ரா இது குறித்து கூறும்போது, “சந்தை மதிப்பு சுமார் ரூ.1,054 கோடி உள்ள மருந்துகள் தற்போது விலைக்கட்டுபாட்டு வலையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மருந்துகளின் விலைகள் 5% முதல் 40% வரை குறையும். அதாவது மருந்து வகையைப் பொறுத்து விலை குறைப்பு இருக்கும்” என்றார்.

மூக்கு முதல் கால் வரையிலான கிருமி நோய்களுக்கான மருந்து என்று அழைக்கப்படும் ஆன்ட்டி பயாடிக் சிப்ரோஃப்ளாக்சசின், செஃபொடேக்சிம், பாராசிட்டமால், டோம்பரிடோன் மற்றும் மெட்ஃபோர்மின்+கிளைம் உள்ளிட்ட அன்றாடத் தேவை மருந்துகள் விலைக்கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 652 மருந்துகள் விலைக்கட்டுப்பாட்டு வலையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த மருந்துகள் பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களான அபாட், கிளாக்ஸோ-ஸ்மித் கிளைன் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களான லூபின், கெடிலா ஹெல்த் கேர், இப்கா, சன் பார்மசூட்டிக்கல்ஸ் மற்றும் சில நிறுவனங்களைச் சார்ந்ததாகும்.

ஆனாலும் இத்தகைய விலைக்கட்டுப்பாடுகளினால் நிறுவனங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது, ஏனெனில் இந்த மருந்துகளின் விற்பனை அந்த நிறுவனங்களின் ஒட்டுமொத்த விற்பனையில் பெரிய அளவில் பங்களிப்பு செய்வதில்லை என்று கூறப்படுகிறது.

விலைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் மருந்துகளுக்கு மாற்று புதிய மருந்தை பன்னாட்டு நிறுவனங்கள் களத்தில் இறக்கும் போது, இந்த மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்தால் மட்டுமே அதன் பலன் மக்களைச் சென்றடையும்.

ஏற்கெனவே அல்சர் அல்லது கேஸ்ட்ரைட்டீசுக்கு ஒரு காலத்தில் இருந்த சைமிடிடின் ஓரங்கட்டப்பட்டு ரானிடிடின் வந்தது, பிறகு ஃபேமோடிடின் வந்தது, அதன் பிறகு ஓமிப்ரசோல், அதன் பிறகு லான்சப்ப்ரசோல், பாண்டப்ரசோல் என்று போய்க்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ரானிடிடினை விலைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டால் சரியாகப் போய் விடுமா என்பது எந்த அளவுக்குப் பலன் அளிக்கும் என்பது தெரியவில்லை.

அதேபோல்தான் சிப்ரோபிளாக்சசின் ஒரு காலத்தில் மருத்துவர்களின் பிரிஸ்கிரிப்ஷன் பேடை ஆக்ரமித்த மருந்து, இன்று ஆன்ட்டி பயாடிக்குகள் பல்படித்தாக பெருகியுள்ளது, இந்நிலையில் சிப்ரோபிளாக்சசினை விலைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் போதுமானதாகி விடுமா? போன்ற கேள்விகள் எழுகின்றன.

எனவே, விலைக்கட்டுப்பாட்டினால் உண்மையில் மக்களுக்கு என்ன நன்மை விளைகிறது என்பது போகப்போகத்தான் தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x