

புதுடெல்லி, பிடிஐ
இந்திய காங்கிரஸ் கட்சியின் யுகே பிரதிநிதிகளுடன் காஷ்மீர் மனித உரிமைகள் நிலவரங்கள் பற்றி விவாதித்ததாக பிரிட்டன் தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரெமி கோபின் ட்வீட் செய்ததையடுத்து காங்கிரஸ் மீது பாஜக கடும் விமர்சனங்களை முன்வைக்க அதற்கு காங்கிரஸ் கட்சி பதிலளித்துள்ளது.
இந்திய அயல்நாட்டு காங்கிரஸின் பிரிட்டன் கிளை பிரிட்டன் தொழிலாளர் கட்சித் தலைவரைச் சந்தித்தது காஷ்மீர் இந்திய உள்நாட்டு விவகாரம் இதில் தலையீட்டை ஓரு போதும் ஏற்க முடியாது என்று கூறியதாகவும் இது தொடர்பாக பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவித்ததாகவும் கூறி பாஜகவுக்கு பதில் அளித்துள்ளது.
“பிரிட்டன் தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரெமி கோபினைச் சந்தித்தது அவர்களின் காஷ்மீர் குறித்த தீர்மானத்துக்கு கண்டனம் தெரிவிப்பதற்காகத்தான். ஜம்மு காஷ்மீர் விவகாரம் இந்திய உள்நாட்டு விவகாரம் இதில் வெளிநாடு தலையீடுகளை ஏற்க முடியாது என்பதை வலியுறுத்தத்தான். இது தொடர்பாக பாஜக வெளியிட்டு வரும் விஷமத்தனமான அறிக்கைகள் தங்கள் ஆட்சியின் தோல்விகளிலிருந்து மக்களை திசைத் திருப்புவதற்காகத்தான்” என்று இந்திய அயல்நாட்டு காங்கிரஸ் கிளை ட்வீட் ஒன்றில் பதிவிட்டுள்ளது.
மேலும், “பொருளாதார மந்தநிலை, அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், வங்கிகளின் நெருக்கடி, ரபேல் ஒப்பந்தத்தின் முறைகேடுகள் ஆகியவை பற்றி எந்த ஒரு கேள்விக்கும் பாஜக பதிலளிப்பதில்லை. எனவேதான் உண்மைகளை மறைக்க பொய்களைப் பரப்பி வருகின்றனர். அவர்கள் தங்கள் பிரச்சாரத்தின் கீழ் இனி ஒளிந்து கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளது.
இந்திய காங்கிரஸ் கட்சியின் அயல்நாட்டுக் கிளை பிரிட்டன் தொழிலாளர் கட்சித் தலைவரைச் சந்தித்தது குறித்து பாஜக கடுமையாகச் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.