Published : 10 Oct 2019 11:39 AM
Last Updated : 10 Oct 2019 11:39 AM

இந்தி ‘பிக்பாஸு’க்கு தடை வேண்டும்: மத்திய அமைச்சருக்கு பாஜக எம்எல்ஏ கடிதம்

லக்னோ,

இந்தியில் வெளியாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சாரத்தை இழிவுபடுத்துகின்றன என்று கூறி அதற்கு தடை கேட்டு உ.பி. பாஜக எம்எல்ஏ மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியில் பிக்பாஸ் ரியாலிடி ஷோவின் 13 வது சீசன் நிகழ்ச்சிகளை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடத்தி வருகிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த இரண்டு வாரங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. என்றாலும் இந்நிகழ்ச்சி வீட்டில் குழந்தைகள் பார்க்க முடியாத நிகழ்ச்சியாக உள்ளதால் இதற்கு தடை விதிக்க வேண்டுமென பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர் குஜ்ஜார் இவர் சல்மான் கான் நடத்திவரும் பிக்பாஸ் ரியாலிடி ஷோவினால் மிகப்பெரிய கலாச்சார கேடு விளைவிப்பதாக கூறிவருகிறார். இதற்கு தடை கோரி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பாஜக எம்எல்ஏ அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

"இந்த நிகழ்ச்சி ஆபாசமான மற்றும் மோசமான செயல்களை ஊக்குவிப்பதாக உள்ளது. குடும்பத்தினர் வீட்டில் அமர்ந்து பார்க்க தகுதியற்ற ஒரு நிகழ்ச்சியாக உள்ளது.

இந்த நிகழ்ச்சி நாட்டின் கலாச்சார நெறிமுறைகளுக்கு எதிரானது மற்றும் மிகவும் ஆட்சேபனைக்குரிய நெருக்கமான படுக்கைக் காட்சிகள் கொண்டுள்ளது. இதில் வேறுபட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் படுக்கை பங்காளிகளாக காட்டப்படுகிறார்கள்; அதன்மூலம் எப்போதைக்குமான படுக்கை நண்பர்கள் என்ற கருத்தாக்கம் ஒன்றையும் இந்நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் உருவாக்குகிறார்கள்.

குடும்பத்தினரோடு அமர்ந்து பார்க்கும் ஒரு டிவி நிகழ்ச்சியில் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாது.

குழந்தைகளும் சிறார்களும் தொலைக்காட்சியைப் பார்க்கிறார்கள், ஆனால் இந்நிகழ்ச்சி வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டுள்ளது. மேலும் நிகழ்ச்சிகள் இணையத்திலும் கிடைக்கின்றன.

ஒருபுறம், பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா தனது இழந்த பெருமையை மீண்டும் பெற முயற்சிக்கிறார், மறுபுறம், இதுபோன்ற நிகழ்ச்சிகள் நாட்டின் கலாச்சாரத்தை இழிவுபடுத்துகின்றன.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் உள்ளடக்கத்திற்கான தணிக்கை பொறிமுறைகள் வரையறுக்கப்பட வேண்டும். நேரடியான ஆபாச காட்சிகள் கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் தனது கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

பிராண மகாசபா உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென ரியாலிட்டி ஷோவிற்கு தடை கோரியுள்ளது. இது தொடர்பாக மகாசபா காசியாபாத் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு குறிப்பை சமர்ப்பித்துள்ளது.

இதற்கிடையில், உத்தரபிரதேச நவ நிர்மாண் சேனா தலைவர் அமித் ஜானி, 'பிக் பாஸ்' நிகழ்ச்சி நிறுத்தப்படும் வரை எந்த உணவு தானியத்தையும் சாப்பிட மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.

இதுகுறிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

‘‘மோசமான மற்றும் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் நிகழ்ச்சியை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் வரை நான் பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டுமே உண்டு உயிர் வாழ்வேன். தொலைக்காட்சியில் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் இளம் தம்பதிகளை காண்பிப்பது ஏற்கத்தக்கதல்ல.‘‘

இவ்வாறு உ,பி. மாநில நவ நிர்மாண் சேனா தலைவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x