

கொல்கத்தா,
மேற்கு வங்க எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் குறுக்குவழியில் நுழைய முயன்ற வங்கதேசத்தைச் சேர்ந்த 5 பேர் 24 பர்கானா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) அதிகாரிகள் இன்று புதன்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மேற்கு வங்க எல்லைப் பகுதிகளில் நேற்றிரவு எல்லைப் பாதுகாப்புப் படைகள் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். 24 பர்கானா மாவட்டத்தின் எல்லைப் பகுதியான கோஜடங்கா மற்றும் தராலி ஆகிய இரண்டு பகுதிகளிலும் நடந்த இரண்டு தனித்தனியான சம்பவங்களில் வங்கதேச பிரஜைகள் 5 பேர் போலீஸாரால் தடுத்துநிறுத்தப்பட்டனர்.
ஆரம்ப விசாரணையின் போது, இவர்கள் எந்தவித ஆவணங்களும் இன்றி இந்தியாவுக்கு ஊடுருவியுள்ளது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் வங்கதேச இடைத்தரகர்களின் உதவியுடன் இந்தியாவுக்கு வந்ததாகக் கூறினர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் அடுத்தக்கட்ட சட்டபூர்வ நடவடிக்கைகளுக்காக அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
மற்றொரு சம்பவத்தில், நேற்றிரவு ராஜ்நகர் மற்றும் கோஜடங்கா பகுதிகளில் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் பதுங்க முயன்ற நான்கு இந்தியர்கள் கைது செய்யப்பட்டடனர்.
இவ்வாறு எல்லைப் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மட்டும், இதுவரை சட்டவிரோதமாக சர்வதேச எல்லையை கடக்க முயன்றதற்காக தென் வங்க எல்லைப்புறத்தின் பி.எஸ்.எஃப் துருப்புக்கள் 278 இந்திய மற்றும் 1,214 பங்களாதேஷ் பிரஜைகளை கைது செய்யப்பட்டுள்ளனர்.