Published : 09 Oct 2019 06:02 PM
Last Updated : 09 Oct 2019 06:02 PM

மகாராஷ்டிர தேர்தல்; பிரச்சாரம் செய்யாமல் ராகுல் காந்தி வெளிநாடு சென்றது ஏன்? - பட்னவிஸ் கிண்டல் 

மும்பை

மகாராஷ்டிர தேர்தலில் காங்கிரஸுக்கு பிரச்சாரம் செய்யாமல் ராகுல் காந்தி தவிர்த்ததன் மூலம் அக்கட்சி முன்கூட்டியே தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டது என அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிர அரசின் பதவிக்காலம் முடிவடைவதால் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

நீண்டகாலமாக கூட்டணியில் உள்ள பாஜகவும், சிவசேனாவும் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்தநிலையில் துலே மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தேசியவாத காங்கிரஸை பொறுத்தவரையில் தேர்தலுக்கு முன்பே பாதி காலியாகி விட்டது. தேர்தல் முடிவு வந்த பிறகு மீதியும் காலியாகி விடும். அந்த கட்சியை மீண்டும் காங்கிரஸுடன் இணைக்கப்போவதாக சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைவது உறுதி. அவர்களுக்கு தேர்தலுக்கு முன்பே இது தெரிந்து விட்டது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாங்காங்கில் இருப்பதாக பத்திரிக்கைளில் செய்தி வெளியாகியுள்ளது. எப்படிாகிலும் இந்த தேர்தலில் காங்கிரஸ் தோற்பது உறுதி, பிறகு தோல்விக்கு நாம் ஏன் பொறுப்பேற்க வேண்டும் எனக் கருதி ராகுல் காந்தி பிரச்சாரம் செய்யவில்லை.

தோல்விக்கு பயந்து ராகுல் பிரச்சாரம் செய்ய வரவில்லை. பாஜக அரசு கடந்த 5 ஆண்டுகளில் பல சாதனைகளை செய்துள்ளது. விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து போலி வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் தாஜ்மகால் கட்டித்தரப்படும் என்று மட்டும் தான் அவர்கள் வாக்குறுதி அளிக்கவில்லை. மற்ற அனைத்து வாக்குறுதிகளையும் கொடுத்து விட்டார்கள். எதையும் அவர்கள் செய்யப்போவதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x