Published : 09 Oct 2019 04:58 PM
Last Updated : 09 Oct 2019 04:58 PM

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்; யாரெல்லாம் பங்கேற்கிறார்கள்?

புதுடெல்லி

மாமல்லபுரத்தில் அதிகாரபூர்வமற்ற முறையில் நடக்கும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பின்போது இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் ஏராளமான இடங்களைப் பார்வையிட்டு, கலை நிகழ்ச்சியிலும் பங்கேற்கின்றனர்.

11,12-ம் தேதிகளில் சென்னை மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் பிரதமர் மோடியை அதிகாரபூர்வமற்ற சந்திக்க உள்ளார். இரு தலைவர்களுக்கு இடையிலான இந்தச் சந்திப்பில் எந்தவிதமான ஒப்பந்தங்களும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையொப்பமாகாது. நட்பை வலுப்படுத்திக்கொள்ளவும், இருநாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தும் விதமாக சந்திப்பு நடத்தப்படுகிறது.

11-ம் தேதி பிற்பகலில் சென்னை வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் விமான நிலையத்தில் இருந்து பிரத்யேக காரில் புறப்பட்டு மதிய உணவுக்கு ஐடிசி சோழா நட்சத்திர ஹோட்டலுக்குச் செல்கிறார். அங்கு உணவை முடித்துக்கொண்டு, பிரதமர் மோடியை மாமல்லபுரத்தில் மாலையில்தான் சந்திக்க உள்ளார்.

பிரதமர் மோடியும், அதிபர் ஜி ஜின்பிங்கும் மாலையில் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேச உள்ளனர். மாமல்லபுரத்தில் இருக்கும் பல்லவர்கள் கால சிற்பங்கள், குகைக் கோயில்கள், கட்டிடங்கள் ஆகியவற்றை இரு தலைவர்களும் பார்வையிடுகின்றனர்.

11-ம் தேதி இரவு சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்கிறார். அதன்பின் கலாஷேத்ரா சார்பில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு தலைவர்களும் கலாஷேத்ரா சார்பில் நடத்தப்படும் பாரம்பரிய நடனம், கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிடுகின்றனர்

அதன்பின் 12-ம் தேதி காலையில் பிரதமர் மோடியும், அதிபர் ஜி ஜின்பிங்கும் 2-ம் கட்டப் பேச்சில் ஈடுபடுகிறார்கள். இந்தப் பேச்சு தாஜ் குழுமத்தில் உள்ள பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் நடக்கிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.

அங்கு மதிய உணவை முடித்துக்கொண்டு 2 மணிக்கு அதிபர் ஜி ஜின்பிங் நேபாளம் புறப்படுகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்பின்போது பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் இடம் பெறுவார்கள். அதேபோல, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இடம் பெறுவார்கள்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x