Published : 09 Oct 2019 03:31 PM
Last Updated : 09 Oct 2019 03:31 PM

ரபேல் விமானத்துக்கு பூஜை; நாடகம் நடத்துவதா? - ராஜ்நாத் சிங்குக்கு காங்கிரஸ் கண்டனம்


கல்பர்கி

ரபேல் விமானத்துக்கு பூஜை செய்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடகம் நடத்தியதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய விமானப்படைக்கு, 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க, பிரான்ஸ் நாட்டுடன், 2016 செப்டம்பர் மாதத்தில், 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டது.

4 ரஃபேல் விமானங்கள் கொண்ட முதல் பேட்ச் 2020-ல் இந்தியாவுக்கு வந்து சேரும். அனைத்து 36 ரஃபேல் போர் விமானங்களும் செப்.2022 வாக்கில் இந்தியாவுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, பிரான்ஸ் நாட்டின், 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனம் தயாரிக்கும் இந்த போர் விமானத்தின், முதல் விமானம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

இதற்காக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் சென்றார். அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்த ராஜ்நாத் பின்னர், ரபேல் போர் விமானங்கள் தயாரிக்கப்படும் தொழிற்சாலைக்கு சென்றார்.

பின்னர் முதல் விமானத்தை, பிரான்ஸில் ராஜ்நாத் சிங் பெற்று கொண்டார். முன்னதாக ரபேல் விமானத்திற்கு ராஜ்நாத் சிங்சாஸ்த்ர பூஜை நடத்தினார். ரபேல் விமானத்திற்கு சந்தனப் பொட்டு வைத்து, முன் பகுதியில் தேங்காய், பூக்கள் வைத்து, ஓம் என்று ஹிந்தியில் ராஜ்நாத் சிங் எழுதினார்.

ரபேல் விமானத்துக்கு கயிறு கட்டிய பின், டயருக்கு அடியில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:

ரபேல் விமானத்தை வைத்து மத்திய அரசு நாடகம் நடத்துகிறது. இதுபோன்ற தமாசு தேவையில்லை. போபர்ஸ் போன்ற பீரங்கிகள் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்டுள்ளன. ஆனால் இதுபோன்ற நேரில் சென்று அமைச்சர்கள் வாங்கியதில்லை. இதுபோன்ற பூஜை எதுவும் செய்ததில்லை. ரபேல் விமானங்கள் தரமானவையா அல்லது மோசமானதா என்பதை நான் கூற முடியாது. விமானப்படை அதிகாரிகள் தான் கூற முடியும்.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x