Published : 09 Oct 2019 03:16 PM
Last Updated : 09 Oct 2019 03:16 PM

பிரதமர் மோடியுடனான சந்திப்பு; காஷ்மீர் விவகாரம், 370-வது பிரிவு நீக்கத்தை எழுப்புவாரா ஜி ஜின்பிங்?

புதுடெல்லி

மாமல்லபுரத்தில் வரும் 11, 12-ம் தேதிகளில் நடக்கும் பிரமதர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம், 370-வது பிரிவு நீக்கம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படாது என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனென்றால், 370-வது பிரிவு நீக்கம் என்பது இந்தியாவின் அரசியலமைப்போடு தொடர்புடையது என்பதாலும், இறையாண்மை முடிவு என்பதாலும் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசமாட்டார் என மத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 11, 12-ம் தேதிகளில் மாமல்லபுரத்துக்கு இரு நாட்கள் பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியை அதிகாரபூர்வமற்ற முறையில் சந்தித்துப் பேச உள்ளார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசும், மத்திய அரசு அதிகாரிகளும் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் அதிகாரபூர்வற்ற முறையில் 2-வது முறையாகச் சந்திக்கிறார்கள். இதற்கு முன், கடந்த ஆண்டு உஹான் நகரில் சந்தித்து இரு தலைவர்களும் பேசியுள்ளனர்.

மாமல்லபுரத்தில் இரு தலைவர்களுக்கு இடையே நடக்கும் சந்திப்பின்போது, எந்தவிதமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கையொப்பங்கள் ஏதும் நடக்காது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது முழுக்க இரு நாடுகளின் தலைவர்களும் நட்புரீதியாக நடத்தும், இரு நாட்டு மக்களையும் நெருக்கமாக வைக்கவே நடத்தும் பேச்சு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால், சீனாவுக்கு இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. காஷ்மீர் விவகாரம் குறித்தும், 370-வது பிரிவு நீக்கப்பட்டது குறித்தும் பிரதமர் மோடியிடம், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆலோசிப்பாரா என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து மத்திய அரசின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாகத் தெரிவித்துவிட்டது. அரசியலமைப்பின் 370-வது பிரிவு நீக்கப்பட்டது என்பது இந்திய அரசியலமைப்போடு தொடர்புடையது. எங்கள் இறையாண்மைக்கு உட்பட்டது என்று தெளிவாக உலக நாடுகளுக்கு அறிவித்துவிட்டது. ஆதலால் இந்த விஷயம் குறித்து சீன அதிபர் பேசமாட்டார் என்றே கருதுகிறோம்.

ஒருவேளை காஷ்மீர் விவகாரம் குறித்து தெரிந்துகொள்ள சீன அதிபர் விரும்பினால், அதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் விரிவான விளக்கம் அளிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து லடாக் யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டதற்கும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், லடாக் பகுதி மக்களின் விருப்பத்துக்கு இணங்க அங்கு வளர்ச்சி, மேம்பாடு உருவாகவும், உரிமைகள் கிடைக்கவும் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது என்றும் சீனாவிடம் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதில் அளிக்கும் வகையில், " எந்தவிதமான புற எல்லைகளையும் மாற்றி அமைக்க இந்தியா முயலக்கூடாது" எனத் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.வில் எழுப்பிப் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 2 நாட்கள் பயணமாக சீனாவுக்குச் சென்றுள்ளார். சீனாவின் அதிபர் லீ கெகியாங்கை நேற்று சந்தித்த பிரதமர் இம்ரான் கான் இன்று அதிபர் ஜி ஜின்பிங்கையும் சந்திக்க உள்ளார்.

ஐநாவில் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்த சீனா, நேற்று தனது நிலைப்பாட்டை முற்றிலுமாக மாற்றிவிட்டது. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கெங் சுவாங் கூறுகையில், " காஷ்மீர் விவகாரம் இந்தியா- பாகிஸ்தான் தொடர்புடையது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். இதுதான் இரு நாடுகளுக்கும், உலகிற்கும் நலமாக அமையும். காஷ்மீர் விவகாரத்தில் சீனா தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x