Published : 09 Oct 2019 02:09 PM
Last Updated : 09 Oct 2019 02:09 PM

ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் விலகிச் சென்றதுதான் மிகப்பெரிய பிரச்சினை: மனம் திறந்த சல்மான் குர்ஷித்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி

தேர்தல் தோல்வியையும், சிக்கல்களையும் எதிர்கொள்ளாமல் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் விலகிச் சென்றதுதான் காங்கிரஸ் இன்று சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்று மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் விலகிச் சென்றார் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு மூத்த தலைவர் வெளிப்படையாக விமர்சிப்பது இதுதான் முதல் முறையாகும்.

மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட 2-வது முறையாகப் பெறமுடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டு 52 இடங்களில் மட்டுமே வென்றது. இதனால், தோல்விக்குப் பொறுப்பேற்று, ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை ஏற்காத மூத்த தலைவர்கள் அவரைப் பதவியில் தொடர வலியுறுத்தினார்கள். ஆனால், பிடிவாதமாக இருந்த ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாவை செய்வதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து, இடைக் காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகிய பின் கட்சிக்குள் ஒருவிதமான குழப்பமான சூழல் தென்பட்டது, ஏராளமான தலைவர்கள், மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு விலகி பாஜகவில் சேர்வதும், மற்ற கட்சிகளில் இணைவதுமான சூழல் இருந்து வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் நிலை குறித்து மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் வெளிநாட்டு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

அவர் அதில் கூறியிருப்பதாவது:

''மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின், காங்கிரஸ் கட்சிக்கு ஏன் தோல்வி ஏற்பட்டது என்று அனைவரும் ஒன்றாகக் கூடி ஆலோசிக்கக் கூட எங்களால் முடியவில்லை.

இப்போது எங்கள் முன் இருக்கும் முக்கியமான, மிகப்பெரிய பிரச்சினையே, தோல்வியை எதிர்கொள்ளாமல் ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து பொறுப்பற்ற முறையில் விலகிச் சென்றதுதான்.

தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்ற அவரின் தனிப்பட்டமுடிவை மதிக்கிறோம். ஆனால், இன்னும் சிறிது காலத்துக்கு அவர் தலைவர் பதவியைத் தொடர்ந்திருக்க வேண்டும் என்று கட்சித் தொண்டர்கள், தலைவர்கள் கேட்டுக்கொண்டும் அவர் அதைப் புறக்கணித்துவிட்டார்.

ராகுல் காந்தியின் ராஜினாமாவால், கட்சிக்குள் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகி நிலைமையை மோசமாக்கி இருக்கிறது. இதைச் சரிகட்ட சோனியா காந்தி தற்காலிக தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். இதை தற்காலிக ஏற்பாடாகவே பார்க்க முடியும்.

ராகுல் காந்தி ராஜினாமா செய்வதை நான் விரும்பவில்லை. தொடர்ந்து தலைவர் பதவியில் இருங்கள் என்று தெரிவித்தேன். தொண்டர்கள் ஆசைப்படி ராகுல் கட்சித் தலைவர் பதவியில் நீடிப்பார், கட்சியை வழிநடத்துவார் என்று நான் நம்பினேன். ஆனால் ராகுல் காந்தி செய்யவில்லை.

மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து ஒருவிதமான அசாதாரண சூழல் கட்சிக்குள்ளும், தேசத்திலும் இருக்கிறது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சிலர் விலகிச் செல்லமாட்டார்கள். நாங்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைந்த பகுதி. நான் ஒருபோதும் கட்சியில் இருந்து விலகமாட்டேன்.

என்ன நடந்தாலும் எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. நான் கட்சியைவிட்டு விலகமாட்டேன். அனைத்தையும் கட்சியிடம் இருந்து பெறும் நபர்களைப் போல் நாங்கள் அல்ல. கட்சியில் சின்ன தோல்வி ஏற்பட்டால்கூட உடனே வெளியேறும் நபர்கள் நாங்கள் அல்ல. பொறுப்பற்ற முறையில் விலகிச் செல்லும் மனிதர்களைப் போலும் நாங்கள் அல்ல’’.

இவ்வாறு சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x